80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க,

“வடக்கு மாகாண சபையை மீளமைத்து, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இதற்கு விக்னேஸ்வரன் ஒத்துழைப்பை வெளிப்படுத்தவில்லை.

மாகாணசபைகளின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துதுரையாடும் வாய்ப்புகள் இருந்த, 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஹிக்கடுவையில் நடந்த போது, அதில் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. முதலமைச்சர்களின் மாநாடுகளையும், அமைச்சரவைக் கூட்டங்களையும் அவர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

விக்னேஸ்வரன் அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஸ்வரனின் செயற்பாடுகளின் பின்னால் உள்ள காரணங்களை வெளிப்படுத்தும் பொறுப்பு ஆளுனருக்கு உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வடக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலையை உயர்த்துவதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதனைச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் 20 வீத நிதியே அபிவிருத்திக்காக செலவிடப்படுகிறது, மீதம் 80 வீதமான நிதி ஆண்டு இறுதியில் திறைசேரிக்கே திரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில், வடக்கிற்கு அரசாங்கம் எவ்வளவு நிதியை ஒதுக்குகிறது என்று செய்தியாளர் ஒருவர், கேள்வி எழுப்பிய போது, அது தனக்குத் தெரியாது என்று நிசாந்த சிறி வர்ணசிங்க பதிலளித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares