20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு, சபாநாயகரின் செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பின்னர், சபாநாயகர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்ற அவைக்கு அறிவிக்க உள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 30க்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 நீதியரசர்கள் அமர்வு விசாரித்தது.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்லாது சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மனுதார்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.