Breaking
Thu. Apr 25th, 2024

நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.


கொலைகாரர்கள், காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பவை தொடர்பில் இந்தத் தர்க்கம் மூண்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றது.


இதில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தான் விவாதத்துக்குப் புறம்பான சில விடயங்களைப் பேச வேண்டியிருப்பதாகக் கூறி வழக்கம் போலவே தமிழ் அரசியல் தரப்புக்களையும், தமிழ் ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்தார்.


குறிப்பாக அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைப் பற்றிக் கூறிய விடயமொன்றைக்கூறி அவரைக் கடுமையாக விமர்சித்தார்.


ஒரு கட்டத்தில் யாழில் பொலிஸ் அதிகாரியைக் கழுத்தறுத்துக் கொன்ற சம்பவத்துடன் அவருக்குத் தொடர்பு இருக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். இவர்களே பலரைக் காட்டிக்கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.


இவ்வாறானவர்கள் பேசும் பேச்சுக்களை சில தமிழ் ஊடகங்கள் முன்பக்கச் செய்தியாக ‘சீறினார்’, ‘பாய்ந்தார்’, ‘கடித்தார்’, ‘குரைத்தார்’ என வெளியிட்டு தமது இருப்பைத் தக்க வைப்பதாகவும் சாடினார்.


இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஒரு கொலைகாரர், அப்பாவியான ஒருவரைக் கொலைகாரர் எனக் கூறுவதை ஏற்க முடியாது.


இவர் அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். எனவே, இதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது” என்று அப்போது சபைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனிடம் வலியுறுத்தினார்
எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் வசைபாடிக்கொண்டே இருந்தார்.

இதையடுத்து மீண்டும் எழுந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., “சபைக்குத் தலைமை தாங்கும் உங்களுக்குத் தமிழ் தெரியும் என்பதால் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் விவாதத்துக்குப் புறம்பான விடயங்களைப் பேசுகின்றார்” – என்றார்.
இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விடயம் தொடர்பில் பேசுமாறு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் கூறவே தொடர்ந்தும் சிறிது நேரம் வசைபாடிய டக்ளஸ் தேவானந்தா, பின்னர் விவாதம் தொடர்பில் பேசினார்.


இதற்கிடையில் அவருக்கான நேரம் முடிவடைந்து விட்டது என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் கூறினார்.


இதையடுத்து அடுத்த உறுப்பினர் பேச எழுந்தபோதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் எம்.பிக்கள் ஆகியோரும் சிறிது நேரம் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *