பிரதான செய்திகள்

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயர் வரவேற்பு!

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று  காலை பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

 

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு இன்று காலை மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆமோக வரவேற்பினை வழங்கினர்.

மன்னார்-தள்ளாடி சந்தியில் வைத்து மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ வரவேற்கப்பட்டு மன்னார்-தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் குருக்களைக் கொண்ட  உப குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் இடம் பெற்றது.

காலை 9.30 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து புதிய ஆயரை பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் நியூஜன் வன் ரொட்  ஆண்டகை, கொழும்பு பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜேசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை மற்றும் மறைமாவட்ட ஆயர்கள், குருக்கள் இணைந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பிரதான பாலத்தடி வரை புதிய ஆயர் உள்ளிட்ட குழுவினர் மோட்டார் சைக்கில் பவனியூடாக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நாதஸ்வரம், பாண்ட் மற்றும் இன்னிய வாத்தியம் முழங்க புதிய ஆயர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குப் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை சென்றடைந்ததும் பேராலயத்தின் பிரதான வாயிலில் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் போன்றோர் புதிய ஆயருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் புதிய ஆயர் உட்பட அனைத்து ஆயர்கள் குருக்கள் பேராலய மண்டபத்திற்கு சென்று அங்கு திருப்பலிக்குரிய ஆடையை அணிந்து கொண்டனர்.

பின்னர் பேராலய மண்டபத்திலிருந்து வீதி வழியாகப் பவனியாக வரும் இவர்களைத் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி சிறுமியர் நடனமாடி வரவேற்று பேராலய வாசல்வரை அழைத்துச் சென்றனர்.

பேராலய வாசலில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் திருச்சிலுவையை வழங்க புதிய ஆயர் அதனை முத்திசெய்தார்.

தொடர்ந்து பேராலயப் பங்குத்தந்தை அருட்திரு. பெப்பி சோசை அடிகளார் ஆசிநீர் குவளையை புதிய ஆயருக்கு வழங்க புதிய ஆயர் அதனைப் பெற்று தானும் ஆசிநீரைப் பூசிக்கொண்டு சூழ நிற்கின்றவர்களுக்கும் ஆசிநீரைத் தெளித்தார்.

பின்னர்  மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் திருப்பலியை ஆரம்பித்தார். திருப்பலியின் வாழ்த்துரைக்குப் பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் மடல திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர்  மேதகு நியூஜன் வன் ரொட் ஆண்டகை அவர்களினால் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது.

திருத்தந்தையின் நியமன மடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளித்தார்.

தொடர்ந்து பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை புதிய ஆயருக்குக் கையளித்தார்.

பின்னர் ஆயருக்குரிய ஆட்சியதிகாரங்களைக் குறிக்கும் செங்கோலை அப்போஸ்தலிக்க பரிபாலகர் புதிய ஆயருக்கு வழங்கினார்.

தொடர்ந்து அப்போஸ்தலிக்க பரிபாலகரும், கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களும் புதிய ஆயரை அழைத்துச்சென்று மறைமாவட்ட ஆயருக்குரிய பேராலயத்தின் அதிகாரபூர்வ இருக்கையில் அமர்த்தினர்.

பின்னர் மன்னார் மறைமாவட்டக் குருக்களும், மன்னார் மறைமாவட்டத்தில் பணி செய்யும் குருக்களும் வரிசையாக வந்து புதிய ஆயரின் மோதிரத்தை முத்தமிட்டு தமது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும், கீழ்ப்படிவையும் தெரிவித்தனர்.

தொடர்ந்து குருக்கள் புதிய ஆயரைச் சூழ்ந்து நிற்கும் நிலையில் தமக்கு வணக்கமும் கீழ்ப்படிவும் வழங்குதற்கான உறுதிமொழியை புதிய ஆயர் குருக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து புதிய ஆயரின் தலைமையில் திருப்பலி இடம் பெற்றது.புதிய ஆயரின்  வரவேற்பு நிகழ்வு மற்றும் பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளில் மறைமாவட்ட ஆயர்கள், நீதவான்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் உற்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 09 மாணவிகள் பரீட்சையில் சித்தி

wpengine

சம்பந்தன் உடனடியாக பதவிவிலக வேண்டும்: கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு

wpengine