Breaking
Fri. Apr 26th, 2024

ஊடகப்பிரிவு

அரசாங்கத்தின் கொள்கைகளும், போக்குகளும், கோட்பாடுகளும் என்னவென்பது   அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவின் மழுப்பல்கள் தடுமாற்றங்களிலிருந்து தெரிவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

நேற்று (12) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“கொழும்புக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரியின் பி.சி.ஆர் (PCR) பரிசோதனை விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சு ஒரு கொள்கையையும், அமைச்சர் விமல் வீரவன்ச வேறொரு கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கொழும்புக்கு வந்த அமெரிக்கப் பிரதிநிதியை இராஜதந்திரி என்றும், முறையான அழைப்பின் பேரிலேயே அவர் வருகை தந்துள்ளதாகவும் வெளிவிவகார மைச்சு கூறும் அதேவேளை, இல்லை! அவர் அமெரிக்க கடற்படையைச் சார்ந்தவர் என்றும், அவரின் வருகை தேடிப்பார்க்க வேண்டியதென்றும் விமல் சாடுகிறார். இவ்வாறு பல விடயங்களில் அரசுக்கும் மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்களும் கொள்கைகளும் இருக்கின்றன. அரசியல் மேடையிலே இவர்கள் தினமும் தப்புத்தாளம் போட்டு வருகின்றனர்.

அப்பாவி மக்களையோ, தொழிலாளர்களையோ பாதுகாப்பு அமைச்சு ஒருபோதும் துன்புறுத்தமாட்டாது என்றும், ஜனாதிபதியின் கொள்கையும் அதுதான் என்றும் அமைச்சின் செயலாளர் அடிக்கடி ஊடகங்களில் கூறி வருகின்றார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னே நடந்த அமைதிவழி ஆர்ப்பாட்டத்தின் போது, படையினர் நடந்துகொண்ட முறைமை முழு உலகமே அறியும். பெண்களை மல்லாக்காகத் தூக்கியெறிவதும், அவர்களின் ஆடைகளைப் பிடித்து இழுப்பதும் அராஜகம் இல்லையா? இந்த அட்டூழியங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தக் கோணத்தில் பார்க்கின்றார்?

அரசாங்கக் கட்சியினதும் அதன் பங்காளிகளினதும் ஊடக மாநாட்டில் முதல் பேசுபொருளாக, ஏசுபொருளாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே இருக்கின்றது. ஆணைக்குழுவை திட்டுவதும், ஹூலை பதவியிலிருந்து துரத்த வேண்டுமெனவும் கூறுவதையே இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த விடயத்தில் வாய்ச்சவடால் மன்னன் விமலும், பேராசிரியர் பீரிசும் முன்னணி வகிக்கின்றனர்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளில், ‘மூன்றில் இரண்டு வைரஸ் காய்ச்சல்’ பீடிக்கப்படுள்ள கட்சிகள் மாத்திரமே, தேர்தல்கள் ஆணைக்குழு மீது பழிகளைச் சுமத்துகிறன. தினமும் அவர்கள் இதனை வாய்ப்பாடாகக் கூறி வருகின்றனர். பச்சைக் கள்வர்களுக்கு வாக்குப்போட வேண்டாமென ஹூல் சொன்னதாகவும், அது தங்களைத்தான் எனவும் இவர்கள் நினைக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *