பிரதான செய்திகள்

வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு! தீர்வு கிடைக்குமா?

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை உத்தியோகத்தர்கள் கடமைக்காக தனியார் பேருந்தில் இருந்து வரும் போது ஏறாவூர் போக்குவரத்து சபைக்கு சொந்தமான கல்முனை தொடக்கம் திருகோணமலை செல்லும் பஸ் இவர்களது பேருந்தை வழி மறித்துள்ளது.

அத்தோடு பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பிரதேச செயலக ஊழியர்களை தகாத வார்த்தைகளால் ஏசியதுடன், வெருகல் பிரதேச செயலாளருக்கு இரும்பு பொல்லைக் காட்டி அடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளருடன் கூறியதை அடுத்து இவர்கள் பயணம் செய்த போது இச்சம்பவம் கடும் மோசமாக நடைபெற்றதாகவும், இதனை இவர்கள் நேரடியாக பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மறுநாள் வெள்ளிக்கிழமை ஊழியர்கள் தங்களுடைய கடமைக்காக பயத்தின் காரணமாக நேரத்திற்கு சென்று விட்டதாகவும், குறித்த சம்பவத்தை கண்டித்தும், உரியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்த போதும், ஆர்ப்பாட்டம் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டாது என்ற வகையில் இதனை கைவிட்டனர் என உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு பிரதேச செயலகத்தினால் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

சேருவில பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பல தடவை நடைபெறுவது தொடர்பாக மட்டக்களப்பு, ஏறாவூர், கல்முனை போக்குவரத்து சபைக்கு பல தடவை பிரதேச செயலாளரால் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் நடைபெறவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்ட போது இன்று  அலுவலக உத்தியோகத்தர்கள் எவரும் கடமைக்கு சமூகம் தரவில்லை எனவும், இது தொடர்பாக நாளை  கடமைக்கு சமூகமளிக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக கல்முனை தொடக்கம் திருகோணமலை வரை செல்லும் தனியார் மற்றும் போக்குவரத்து சபை போக்குவரத்து பேருந்துகள் பயணிகளின் நலன் கருதாது நடத்துனர், சாரதிகள் தகாத வார்த்தைகளால் பேசப்படுவதுடன், அதி வேகமாக ஏட்டிக்குப் போட்டியாக வாகனங்களை செலுத்துவதால் பல விபத்துக்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்களினால் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், குறித்த வீதியில் இவ்வாறு பயணம் செய்யும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து நடத்துனர்களுக்கும், உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகின்ற நிலையில் மாவட்ட அரசியல்வாதிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

தனிமனித சுயகௌரவம் பற்றி தெரியாத மு.கா.கட்சியின் முதலமைச்சர் (விடியோ)

wpengine

கிளிநொச்சி முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

wpengine

இடமாற்றம் முதலமைச்சருக்குக் கிடைத்த வெற்றியா?

wpengine