Breaking
Mon. Nov 25th, 2024

றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் மற்றும் இன்னும் சில அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் சில வந்துள்ளன என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேற்கண்ட விடயத்தை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து உள்வந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மாஅதிபர் அநுர சேனாநாயக்க ஆகிய இருவரையும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இது இவ்வாறிருக்க, பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் உயரதிகாரிகள் அறுவரிடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா, வசீம் தாஜுதீனின் கொலையை, வாகன விபத்தாகத் திரிபுபடுத்தும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் தனக்கு அழுத்தங்களைப் பிரயோகித்ததாக, அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இது தொடர்பிலான ‘பி’ அறிக்கையொன்றை, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், மேற்படி முன்னாள் பொறுப்பதிகாரியின் தகவல்களுக்கமைய, எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, வசீம் தாஜுதீன் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில், அவர் மரணமடைந்து விட்டதாக அந்தக் காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன. அவருடைய சடலம், மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *