சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதியூடாக மன்னார் நகரத்தை அடைந்து மன்னார் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மாபெரும் கவனஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவுகள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமும் நீதியும் சகலருக்கும் பொதுவானது, பொதுமன்னிப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு இல்லையா? என்கின்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
அத்தோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் பயங்கரவாத தடைச்சட்டத்தை சட்டத்தை நீக்க உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.