தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அடியோடு நிகாரித்துள்ளார்.
மேலும் சாக்கடை அரசியலுக்காகத் தங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை விக்கி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
இன்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி.அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். 40 ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும்.
ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை.
அப்பிடியிருக்கின்ற போது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை.
விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.
இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவர் தன்னுடைய அரசியலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்துவிட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும்.
எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம்.