Breaking
Mon. May 20th, 2024

சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், இட்டுக்கட்டப்பட்ட கட்டுகதைகளையும் கொண்டு முஸ்லிம் தலைவர்களை விமர்சனம் செய்வதை அரசியல் கட்சி சார்பு ஆதரவாளர்கள் தவிர்க்க வேண்டும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும்,

முஸ்லிம் சமூகத்தின் மீது இடம்பெற்ற அநீதிகளுக்கு எதிராகவும், சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 03ம் திகதி எடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தல் முடிவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக சமூகத்தின் நலனுக்காக குரல்கொடுத்து வருகின்றோம்.

முஸ்லிங்களின் நிம்மதியான இருப்பு, பாதுகாப்பு, போன்ற பல விடயங்களுக்கு இந்த ஒற்றுமை மிகப்பெரும் சக்தியாக உள்ளது. கடந்த கால சம்பவங்களின் போது சந்தேகத்தில் கைதான அப்பாவி முஸ்லிம் மக்களின் விடுதலை, குருநாகல் போன்ற இடங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க கடுமையாக போராடி வருகிறோம். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறிப்பாக சாய்ந்தமருது நகர சபை விவகாரம், கல்முனை பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை, தோப்பூர், மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒற்றுமையாக கட்சி பேதங்கள் இல்லாமல் போராடி வருகின்றோம்.

கல்முனை விடயம் பூதாகரமாக வெடித்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களும் சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம். பௌஸி அவர்களும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னுடன் இணைந்து அரசுடன் அந்த அநீதிக்கு எதிராக போராடினார்கள். என்பதை யாரும் மறைக்க முடியாது.

தீர்வுகளை நோக்கிய விடயங்களில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோர்கள் கட்சி பாகுபாடுகள் இல்லாமல், முஸ்லிம் மக்களுக்காக ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்காக தலைவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டுவரும் போது இந்த ஒற்றுமையான போக்கை பிரிக்க சில தீய சக்திகளின் வார்த்தைகளை நம்பி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதாரவாளர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மனம் நோகும் படியான பிரச்சாரங்களை சமூக வலைத்தளங்களில் செய்துவருவது ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகும்.

இவ்வாறு ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய காலத்தில் தலைவர்களை பொது வெளியில் விமர்சிப்பது ஆரோக்கியமானதில்லை.

இன்று முன்னாள் அமைச்சர் றிசாத் அமைச்சு பதவியை ஏற்க ஜனாதிபதி செயலகம் சென்றதாகவும், அங்கிருந்து அவர் திருப்பியனுப்பட்டதாகவும் வரும் செய்திகள் கட்டுகதைகளே. இவ்வாறான பொய்யான, மோசமான பிரச்சாரங்கள் கண்டிக்கதக்கது.

இவ்வாறு ஒரு முஸ்லிம் கட்சி தலைவரை இழிவுபடுத்துவது ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது போன்றதாகும். சமூகம் இக்கட்டான சூழ்நிலையில் தவித்த போது ஒற்றுமைப்பட்டு இந்த சமூகத்துக்காக குரல்கொடுத்த தலைவர்களை மானவங்கப்படுத்தி அவர்களை மனம் நோக செய்ய கூடாது என அல்லாஹ்வை முன்னிறுத்தி கேட்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

-ஊடக பிரிவு-

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *