வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் எனப்படும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பின் அபார வளர்ச்சி!
2010ம் ஆண்டு அறிமுகமானது வாட்ஸ் அப் குறுந்தகவல் செயலி. நம்மை ரியாலிட்டி என்னும் நிஜ உலகில் இருந்து துண்டிக்கவிட்டு ஆன்லைன் என்னும் நிஜமான ஆப்லைன் உலகத்திற்கு கொண்டு சென்றதில் வாட்ஸ் அப்பின் பங்கு அளவிட முடியாதது. ஒரு குறுந்தகவலுக்கு ஒரு ரூபாய் என்று இருந்த காலத்தில் வெறும் இணையதள இணைப்பு இருந்தால் உலகம் முழுவதும் கட்டணம் ஏதுமில்லாமல் குறுந்தகவல், புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்ட ஒலி, வீடியோக்கள் அனுப்பும் வசதியை அளித்த வாட்ஸ் அப் நூறு கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை மட்டுமல்லாமல் பேஸ்புக் நிறுவனத்தையும் கவர்ந்தது.
அதனால் கடந்த 2014ம் ஆண்டு 19 பில்லியன் டாலர்களுக்கு வாட்ஸ் அப்பை பேஸ்புக் கையகப்படுத்தியது. அதன் பிறகு ஆவணங்கள் அனுப்பும் வசதி, ஆடியோ கால் மற்றும் கிப் என்னும் ஒருவித அனிமேஷன் பைல்களை அனுப்பும் வசதியையும் சேர்த்தார்கள். பின்பு மிக பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் என்னும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
எப்படி இருக்கிறது வீடியோ கால் வசதி
தற்போதைக்கு பீட்டா யூசர்ஸ் என்னும் வாட்ஸ் அப்பின் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீடியோ கால் வசதியானது, முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் ஒருவர் மற்றொரு முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் நபருக்கும் மட்டுமே கால் செய்ய முடியும். மேலும் 4ஜி அல்லது நிலையான வைபை இணைப்பிருந்தால் மட்டுமே தெளிவான, தடங்களற்ற வீடியோ காலை செய்ய முடியும்.
பிரைவேட் சாட் எனப்படும் தனிநபர் உரையாடலில் ஏற்கனவே ஆடியோ கால் செய்யும் பகுதியில் வீடியோ கால் செய்வதற்கான ஆப்சன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ‘Calls’ என்னும் ஆப்சன் மூலமாகவும் வீடியோ கால் செய்யவியலும்.
பீட்டா வெர்சன்/ முன்னோட்ட பதிப்பு என்றால் என்ன?
பொது மக்களுக்கு ஒரு புதிய சாப்ட்வேர் அப்டேட்டை அளிப்பதற்கு முன்பு அதை பரிசோதித்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். எனவே பல்வேறு நிறுவனங்கள் தங்களின் அப்டேட்டை முன்னோட்ட பதிப்பாக வெளியிடும். அதன் மூலம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் எதிர்வினைகளை பொறுத்தே பொது மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும். இது போன்ற பீட்டா பதிப்பைத்தான் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தனது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டும் வெளியிட்டுள்ளது.
உங்கள் மொபைலில் பீட்டா பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி?
உங்கள் மொபைலில் கூகுள் பிலே ஸ்டோருக்கு செல்லவும். அதில் வாட்ஸ் அப்பின் பக்கத்தை திறக்கவும். அதன் கீழ்ப்பகுதி வரை சென்றால் “Became a beta tester” என்னும் ஆப்சன் இருக்கும். அதன் கீழே இருக்கும் I’M IN என்னும் ஆப்சனை கிளிக் செய்வதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் நீங்கள் வாட்ஸ் அப்பின் பீட்டா பயன்பாட்டாளராக மாறிவிடுவீர்கள்.
பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்:
முன்னோட்ட பதிப்பு பயன்பாட்டாளர்களுக்கு அந்த குறிப்பிட்ட ஆப்பின் வருங்கால வசதிகள் முன்னரே கிடைக்கும் என்றாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது உங்கள் ஆப்பானது எதிர்ப்பார்க்காத சமயத்தில் கிராஷ் அல்லது சரியாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே உங்கள் பயன்பாட்டு தகவல்களை “கிளவுட் ஸ்டோரேஜில்” பேக்கப் செய்துகொள்வது மிகவும் அவசியமானது.
வாட்ஸ் அப்பின் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்துவதற்கு தயக்கமோ/ சிக்கலோ இருந்தால் சில வாரங்கள் காத்திருங்கள், ஏனெனில் பொது மக்களுக்கான முழு பதிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!