பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது கேள்வி கேட்ட ஐ.தே.கட்சி எம்.பிக்கும் ஐ.தே.கட்சியை சார்ந்த அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் சபையில் உறுப்பினர்களிடையே சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய் மூல கேள்வி பதில் நேரத்தின் போது ஐ.தே.கட்சி எம்.பி புத்திக பத்திரணவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா பதிலளித்த போதே இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஆரம்பித்தன.
கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காது அறிக்கையொன்றை வாசித்ததோடு தனது பதிலை நீடித்தார்.
இதன் போது புத்திக பத்திரண, எனது கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே என்றார்.
அமைச்சர் தனது பதிலை நீட்டிக் கொண்டு போனதை தடுப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய முயற்சித்த போது அப் பிரயத்தனம் வெற்றி பெறவில்லை.
இறுதியில் தனது கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் கிடைக்கவில்லையெனக் கூறிவிட்டு புத்திக பத்திரண எம்.பி தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இதனையடுத்து சபையில் சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.