Breaking
Sat. Apr 20th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

தனது படை பலத்தாலும், நவீன ஆயுத பலத்தாலும் முஜாஹிதீன் போராளிகளை சில வாரங்களில் அடக்கி ஆப்கானிஸ்தான் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரலாம் என்று ரஷ்ய படைகள் திட்டமிட்டது.

ஆனால் இஸ்லாமிய நாட்டை ஆக்கிரமித்த ரஷ்யா என்ற கொமியுனிச படைகளுக்கு சேதத்தினை ஏற்படுத்தி ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் முஜாஹிதீன்கள் மிக மூர்க்கமான முறையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போர் தொடுத்தார்கள்.   

ஆப்கானிஸ்தானிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் போராட்டத்தில் இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்களுக்கு பாகிஸ்தானில் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது. இதனை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI யினர் மேற்கொண்டார்கள்.

அத்துடன் அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் 650 மில்லியன் டொலர் பணத்தினை ஒதுக்கீடு செய்து நேரடியாக முஜாஹிதீன்களுக்கு உதவி செய்தது. அமெரிக்கா வழங்கிய பணத்துக்கு மேலதிகமாக சவூதி அரேபியாவும் பெருமளவு நிதிகளை வழங்கியதுடன், எகிப்து, துருக்கி, பிரித்தானிய போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளும் உதவி செய்தது.  

இந்த போராட்டத்தில் முஜாஹிதீன்களுக்கு பாரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தது ரஷ்யப்படைகளின் வான் தாக்குதலாகும். இதனால் விமானப்படைகளின் பலத்தை அழித்தொழிப்பதில் முஜாஹிதீன்களின் முழுக்கவனமும் இருந்தது.

இதற்காக பாரம் குறைந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா வாரி வழங்கியதுடன் அமெரிக்க இராணுவ நிபுணர்கள் போர்களத்துக்கு சென்று முஜாஹிதீன்களுக்கு இராணுவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.  

ஆப்கானிஸ்தான் மலைக்குன்றுகளும், மலைத்தொடர்களும் இயற்கையாக அமைந்துள்ள ஓர் நாடு. இது கெரில்லா போராளிகளுக்கு மிகவும் சாதகாமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. உயர்ந்த மலைகுன்றுகளில் பதுங்கியிருந்து தோளில்வைத்து தனிநபரால் இயக்கூடிய “ஸ்ரிங்கர்” என்னும் அமெரிக்காவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ரஷ்ய விமான படைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தது.

1979.12.24 தொடக்கம் 1989.02.15 வரையிலான ஒன்பது வருடங்கள் நடைபெற்ற சோவியத் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சுமார் எண்ணூறு விமானங்களும், ஹெலிகொப்டர்களும் முஜாஹிதீன்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதனைவிட அதிகம் என்றே வேறு தகவல்கள் கூறுகின்றன.

ஒன்பது வருட யுத்தத்தில் சுமார் முப்பதாயிரம் சோவியத் ரஷ்ய படைகள் கொல்லப்பட்டதுடன், சுமார் ஐம்பத்தி ஐயாயிரம் ரஷ்ய படைகள் காயமடைந்து ஊனமுற்றதாக கூறப்படுகின்றது.  

அத்துடன் 1.5 மில்லியன் வரையிலான ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கானாமல் போனதாகவும், பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆப்கானிஸ்தானின் அண்டைய நாடுகளான ஈரானிலும், பாகிஸ்தானிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.    

இந்த யுத்தத்தில் தோல்வியடைந்ததனால் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவது என்று ரஷ்யா தீர்மானித்தது. வெளியேறும்போது ஏற்படும் உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக முஜஹிதீன்களோடு 1988 இல் சமாதான ஒப்பந்தத்தை செய்துவிட்டு 1989 பெப்ரவரி மாதம் ரஷ்யாவின் இறுதிப்படைப்பிரிவு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது.  

வியட்நாமில் அமெரிக்க படைகளுக்கு எதிராக வியட்னாம் போராளிகளை ரஷ்யா எவ்வாறு பயன்படுத்தியதோ, அதேபோன்று ஆப்கானிஸ்தான் போரில் ரஷ்ய படைகளுக்கு எதிராக முஜாஹிதீன்களை அமெரிக்கா பயன்படுத்தியது.

தங்களுக்கு எந்தவித உயிர் சேதமுமின்றி முஜாஹிதீன் என்னும் கூலிப்படைகளைக் கொண்டு ரஷ்ய படைகளை அழித்தொழிக்கிறோம் என்ற திருப்தி அமெரிக்காவிடம் இருந்தது.

ஆனால் மறுபுறத்தில் வல்லரசு நாடுகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் அரபு நாடுகளை மீட்டெடுப்பதுடன், முதலாவது உலகமகா யுத்தத்தின் போது இழந்த இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்கான படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த போரை படன்படுத்தி அதன்மூலம் போரிடும் ஆற்றலையும், அனுபவத்தையும் பெற்று போராட்ட இயக்கத்தை பலப்படுத்துவது என்பது முஜாஹிதீன்களின் எதிர்கால திட்டமாக இருந்தது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *