வவுனியா, விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதுடன் செயலாளர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், குற்றம் சாட்டியுள்ள பழைய மாணவர்கள் சங்கத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்யுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் பழைய மாணவர்கள் கையொப்பமிட்டு பாடசாலை அதிபர், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் பழைய மாணவர்கள் தெரிவிக்கையில்,
வவுனியா, விபுலானந்தா கல்லூரியின் இவ் வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. இதன்போது கடும் போட்டிக்கு மத்தியில் எமது பழைய மாணவர்களின் விட்டுக் கொடுப்பினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும் ஆன எமது பாடசாலை பழைய மாணவன் சு.காண்டீபன் என்பவர் சங்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பின் அவர் ஏனைய பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையான முறையில் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் பேடன் பவல் பிரவு அவர்களின் சிலைய தனது அரசியல் பெயரை பயன்படுத்தி பொறித்துள்ளதுடன், குறித்த நிகழ்வுக்கு தனது கட்சி சார்ந்த உறுப்பினர்களை விருந்தினர்களாகவும் அழைத்துள்ளார்.
எமது பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கனுளுக்கோ அல்லது எமது பாடசாலை அமைந்துள்ள வட்டாரத்தை பிரதிநித்துவப்படுத்தி நகரசபையில் உள்ள எமது பாடசாலை அபிவிருத்திச் சங்க நகரசபை உறுப்பினருக்கோ அழைப்பு கொடுக்காது வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தனது கட்சிக்காரர்களை அழைத்து வந்து அதனை ஒரு அரசியல் நிகழ்வாக்கியுள்ளார்.
அத்துடன் எமது பாடசாலை ஜனாதிபதி சாரணர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதனை தட்டிக் கேட்ட பழைய மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பழைய மாணவர்களின் அழுத்தம் காரணமாக நேற்று அவசர கூட்டம் ஒன்றிய செயலாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது செயலாளின் ஏதேச்சதிகார போக்கு மற்றும் பாடசாலைக்குள் மேற்கொள்ளும் அரசியல் செயற்பாடு குறித்து தட்டிக்கேட்ட பழைய மாணவர்களுடன் கடுமையாக முரண்பட்டதுடன், ஒரு பழைய மணவரை தாக்கவும் முற்பட்டுள்ளார்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறித்த செயலாளரின் கட்சி உறுப்பினர்கள் சிலர் வெள்ளை வான் ஒன்றில் வந்து பாடசாலைக்கு முன்னால் நின்று அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் எமது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது எமது பாடசாலை தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல இச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற வேண்டும். அது அரசியல் கலப்பற்று சுயாதீனமாக இயங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.