பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா மக்களின் காணிப் பிரச்சினை! வன இலாக்கா அதிகாரிகள் மீது இணைக்குழு தலைவர்கள் காட்டம்

முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியாமல் வன இலாகாவினர் மக்கள் காணிகளை எல்லையிட முடியாது என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்றைய தினம்(11) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குடியிருக்கும் காணிகளில் வன இலாகவினர் எல்லைக்கற்களை இட்டு காணிகளை கையகப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் புதிய வேலர் சின்னக்குளம், சூடுவெந்தபுலவு, மூன்றுமுறிப்பு, கொல்லர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழிடங்கள் மற்றும் அவர்களது பயிர் செய்கை நிலங்களை வன இலாகாவினர் தமது காணிகளாக எல்லைப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதேவேளை, இணைத்தலைவரான அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து வன இலாகாவினரிடம் பதில் கேட்ட போது,
தாம் மக்களது காணிகளை எல்லையிடவில்லை எனவும், மக்கள் தமது காணியை உறுதிப்படுத்தினால் அதனை விடுவிப்பதாகவும் வன இலாகா அதிகாரி ரவீந்திரன் கூறியுள்ளார்.

இதற்கு அமைவாக மக்களது காணிகளை கையகப்படுத்த முடியாது எனவும், அவர்கள் காணிகளை எல்லையிட செல்கின்ற போது வடக்கு முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த பிரதேச செயலாளருடன் இணைந்தே வன இலாகாவினர் காணிகளுக்கு எல்லையிட வேண்டும் எனவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Related posts

மியன்மாரின் காட்டுமீராண்டி தனத்திற்கு எதிராக ஒட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

மின்னல் நிகழ்ச்சியில் அதாவுல்லாவுடன் அநாகரிகமான நடந்துகொண்ட மனோ

wpengine

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்

wpengine