Breaking
Fri. May 3rd, 2024

மாலைத்தீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், வௌிவிவகார அமைச்சர் பேராசியர் G.L.பீரிஸிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மன்னார் – பனங்கட்டுக்கொட்டு கிழக்கு பகுதியை சேர்ந்த டக்ஸன், 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணியில் தனது திறமைகளை வௌிப்படுத்தி வந்தவர் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்பந்தாட்ட விளையாட்டில் இலங்கை மண்ணுக்கு பல கௌரவத்தை பெற்றுக்கொடுத்த டக்ஸன், கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்தார் என்ற செய்தி , தாய்மண்ணிலுள்ள அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டக்ஸனின் மரணம், கொலையா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

உரிய முறையில் விசாரணை நடத்தி, இவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு, வௌிவிவகார அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைத்தீவிலுள்ள குடியிருப்பிலிருந்து டக்ஸனின் சடலம், கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மீட்கப்பட்டது.

மாலைத்தீவு கழக போட்டிக்காக சென்றிருந்த நிலையில், உபாதை காரணமாக கடந்த 26 ஆம் திகதி போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதான அவர் இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராவார்.

அவரின் சடலம் இன்றிரவு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. பூதவுடல் நாளைய தினம் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அன்னாரின் சொந்த ஊரான மன்னாருக்கு கொண்டு செல்லப்படும் என அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *