வவுனியா பழைய பேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்று (30) வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை. எமது உறவுகளைதருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். சர்வதேச நீதியை நம்பியே நாம் போராடிவருகிறோம் எனினும், ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்குஎதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதி தொடர்பாக எந்த பலன்களும் கிடைக்கவில்லை. நாங்கள் இழப்பீட்டிற்கான அலுவலகத்தையோ, காணாமல்போன அலுவலகத்தையோ கோரி போராட்டம் நடாத்தவில்லை.
இதேவேளை குற்றம்செய்த குற்றவாளிகளிடம் நீதி கிடைக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும். அந்தவகையில், இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதைனையான விடயமாகவே இருக்கிறது. எனவே எமது துன்பங்களை தீர்த்துவைப்பதற்கான சர்வதேசநீதியை எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம். என்றனர்.