மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக இருபத்து எட்டாயிரம் சமுர்த்தி பயனாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
புதிய சமுர்த்தி பயனாளிகள் தெரிவு தொடர்பான மீளாய்வு கூட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை அஸ்கர் மகா வித்தியாலயத்தில் இன்று பகல் இடம்பெற்ற போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிகம் காணப்படுகின்றார்கள்.
இலங்கையில் வறுமையில் இருபத்தியொராவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் மூலம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை சமுர்த்தி திட்டத்தினுள் உள்வாங்கும் நோக்கில் புதிதாக இருபத்து எட்டாயிரம் சமுர்த்தி பயனாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு சமுர்த்தி பெறாமல் உள்ளவர்களையும் இணைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன்.
அந்தவகையில் இவர்களையும் முன்னேற்றும் நோக்கில் மேலும் ஐயாயிரம் பயனாளிகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதியை பெற்றுள்ளேன்.
இதேவேளை சில இடங்களில் சமுர்த்தி முத்திரை வேண்டும் என்றால் ஐந்து இலட்சம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை தரவேண்டும் என்று சில உத்தியோகத்தர்கள் கேட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் எமது பகுதியில் அவ்வாறு இல்லை. அவ்வாறு இருந்தால் நீங்கள் எனக்கு ஆதாரத்துடன் தெரிவித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.
உண்மையில் வாழ்வாதார ரீதியாக, பொருளாதார ரீதியாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் என்ற அடிப்படையில் பயனாளிகளை உள்வாங்க வேண்டும். நியாயம், உண்மை, நேர்மை, மனச்சாட்சி அடிப்படையில் நாம் நோன்பு காலத்தில் செயற்பட வேண்டும் என்றார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி திட்டத்தினுள் மாவடிச்சேனை செம்மண்ணோடை பகுதியில் 255 பேரும், தியாவட்டவான் பகுதியில் 171 பேரும், ரிதிதென்னை, ஜெயந்தியாய பகுதியில் 118 பேரும், பிறைந்துறைச்சேனை பகுதியில் 280 பேரும், வாழைச்சேனை பகுதியில் 131 பேருமாக 955 சமுர்த்தி புதிய பயனாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.எம்.கலில் றகுமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஐ.இம்தியாஸ், எல்.ஏ.கபூர், கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி முகாமையாளர் அப்துல் அஸீஸ், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.