Breaking
Fri. Apr 26th, 2024

ஊடகப்பிரிவு 

சிறுபான்மைச்  சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது;

சிறுபான்மையினர் பயமுறுத்தப்படும் ஒரு சூழலில் நாம் இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பேரினவாதிகளின் விருப்புக்கேற்ப செயற்படாததாலே எங்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தியும், அடியபணிய வைத்தும் நெருக்குவாரங்களைத் தருகின்றனர். சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் வன்னி மாவட்டத்தில் இன, மத, மொழி ரீதியாக எமது மக்களைப் பிரித்து, எங்களைத் தோற்கடிப்பதில் பேரினவாதிகள் கங்கணம்கட்டிக் களமிறங்கியுள்ளனர். இதற்காகப் பணம் வழங்கி, பசப்பு வார்த்தைகள் பேசி, பொய்யுரைத்து முயற்சிக்கப்படுகிறது. இதுபற்றி எமது மக்களைத் தொடர்ந்து தெளிவூட்டி வருகின்றோம். இதற்காகத்தான் எங்களைச் சிறையிலடைக்கவும் கைது செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. எங்கள் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்து, நாங்கள் நிரபராதிகள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

இன மோதல்களில்லாத, மத முரண்பாடுகளில்லாத, சமூகக் குரோதங்களில்லாத அழகிய இலங்கையை உருவாக்க வேண்டும். மீண்டும் இரத்த ஆறுகள் இந்த நாட்டில் ஓடக்கூடாது. இதைத்தான் எமது பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ விரும்புகின்றார். எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வன்னிச் சமூகம் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தது போன்று, இம்முறையும் தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிப்பது அவசியம்.

இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், வேட்பாளர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பாயிஸ், ரிப்கான் பதியுதீன், பிரதேச சபை தலைவர்களான சுபியான், முஜாஹிர் உட்பட பல அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *