வனஜீவராசிகளின் பகுதிகளில் அனுமதியின்றி குடியேறியுள்ளவர்கள் மற்றும் விவசாயம் மேற்கொள்வோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வனஜீவராசிகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான பிரதேச ரீதியிலான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சுமித் பிலபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான முதலாவது கூட்டம் வவுனியாவில் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
வனஜீவிகளின் வாழ்விடங்களில் முறையற்ற விதத்தில் மக்கள் எவ்வாறு குடியேறியுள்ளனர் மற்றும் விவசாயங்களை மேற்கொள்கின்றனர் என்பது தொடர்பில் ஆராய்வதே இந்தக் குழுக்களின் முதற்கட்ட பணியாக அமைந்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச மட்ட குழுக்களின் ஆய்வறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேசிய மட்டத்தில் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதேச குழுக்களின் அறிக்கையை ஆராய்ந்து தேசிய குழு, தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ளும் எனவும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சுமித் பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.