வடக்கு , கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் நிலவும் தமிழ் மொழிமூலமான ஊழியர்களுக்கான வெற்றிடம் பெருமளவில் உள்ளது. எனவே அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது எதிரணியின் ஆதரவு உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது தொழில் திணைக்களத்தில் 239வெற்றிடங்கள் உள்ளன. அவற்றில் 202பேரை இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மொழி மூலமான ஊழியர்களுக்கான வெற்றிடமும் உள்ளன.
அதன் பிரகாரம் தற்போது நிலவும் ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் தமிழ் மொழி மூலமான வெற்றிடங்கள் அதிகமாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார்.