பிரதான செய்திகள்

றிஷாத் என்ற தங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நெருப்புக்குள் வீசப்பட்டிருக்கிறது.

-ஒரு முன்னால் ஆசிரியரின் வாக்குமூலம்-

எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இடையிடை மின்னிய நோய்களும் எப்போதும் எரிந்து கொண்டிருந்த மனோவியாதிகளும் இன்று வெப்பமும் பெரும் வெளிச்சமுமாய்க் கப்றுக்குத் தெளிவான வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாயமும் பாவமும் சூழ்ந்த உலகைவிட்டும் மறைந்து மண்ணறைக்குள் உயிர்த்தெழலென்பது சத்தியமெனினும் அங்கான நமது சொர்க்க வாழ்க்கை சாத்தியமா என்பது ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி… இந்தச் சுயபச்சாதாப புலம்பல்களுக்குத் தற்காலிகத் தடைவிதித்துவிட்டு விடயத்துக்கு வருகிறேன்.

அவருக்குப் பத்துப் பன்னிரெண்டு வயதாக இருக்கும் போதே எனக்கு அவரைத் தெரியும். எப்பொழுதும் துடிதுடிப்பான, சுறுசுறுப்பான, உற்சாகம் நிறைந்த சிறுவன் அவர். படிப்பிலும் கெட்டிக்கார மாணவர். பாடசாலை இடைவேளையின் போது தான் என்ன உண்கிறாரோ, அதனைத் தன்னோடொத்த மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் பண்பு அவருக்கிருந்தது. யாருடனும் சண்டை பிடித்தோ அல்லது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டோ நான் பார்த்ததில்லை. ஆசிரியர்களுக்கு மிகுந்த கண்ணியமும் மரியாதையும் தருபவர். அந்தக் காலத்து அவரது வறுமை நிலையிலும் மிகச் சுத்தமான உடைகளுடனும் முகச் சுத்தமான புன்னகையோடும் எப்போதுமிருப்பார்.

அவருக்குப் பதினேழு, பதினெட்டு வயதாக இருக்கும் பொழுது அவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது தனது சமூகத்திற்காகச் செய்த மிகத் துணிச்சலானதும் மிகமிக உயர்ந்ததும் உன்னதமானதுமான ஒரு செயல் இன்னமும் என் மனதில் ஆழப் பதிந்து போயிருக்கிறது.

கொடிய உள்நாட்டுப் போரின் கொடுமைக்குள் சிக்கி மக்கள் உண்ணவும் வழியற்றுப் பட்டினிக்குள் மூழ்கிக் கிடந்த நேரமது. மன்னாருக்கும் வெளிமாவட்டங்களுக்குமிடையிலான தரைவழிப் போக்குவரத்துகள் யாவுமே தடைப்பட்டுப் போயிருந்த காலமது. ஆனாலும் ரிசாத் என்ற அந்த இளைஞர் கடல் வழியாக கொழும்புக்குச் சென்று முடிந்த வரை உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு அதே ஆழக் கடல் வழியே திரும்பி வந்து மக்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்தார். இந்த ஆபத்தான பயணத்தில் அவருடன் கூடவே பயணித்த அவரது மாமா ஐந்து தென்னம்பிள்ளையடிக் கடலின் அகோர அலைகளுக்குள் சிக்கி மௌத்தானார்.

கட்டிளமைப் பருவத்துக்குள் கால் பதிக்கும் முன்னமே தனது சமூகத்தின் பசி தீர்க்க, பட்டினி போக்கத் தனது ஒப்பற்ற உயிரையே அர்ப்பணிக்கும் அளவிற்குத் துணிந்த அந்த ரிசாத் என்ற மாணவனுக்கு நான் ஆசிரியராக இருந்திருக்கின்றேன் என்ற பெருமை எனக்கு இன்னமும் இருக்கிறது.

ரிசாத் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துப் பிரதியமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில் அவரது அமைச்சு அலுவலகத்திற்கு நான் சென்றேன். எனது முதல் விஜயம் அது.

என்னைக் கண்டதும் ரிசாத் எழுந்து நின்றார். “வாங்க சேர்…” என அன்போடு வரவேற்றார். நான் அமர்ந்ததன் பின்னரே தானமர்ந்தார்.

எனக்குப் பெருமையாகவுமிருந்தது; கூச்சமாகவுமிருந்தது. சந்தோஷமாகவுமிருந்தது; சங்கடமாகவுமிருந்தது.

எனது கூச்சத்திற்கும் சங்கடத்திற்கும் நியாயமான காரணங்கள் இருந்தன. ஏனெனில், முன்னரான தேர்தலில் நான் அவருக்கு எதிராகக் களத்தில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டவன். மறைந்த மஷூர் ஹாஜியாருக்கு அரசியல் ஆசையை ஊட்டியூட்டி அவரை அரசியல் அரங்கத்திற்குள் கொண்டு வந்தவன். ஹமீடியாஸ் நிறுவனத்திற்குப் போய் அவருக்குப் பொருத்தமான கோட், சூட், டையெல்லாம் தெரிவு செய்தது முதல் அவரைப் பல கோணங்களில் புகைப்படங்களெடுத்துப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டு மக்களிடையே அவரை மேலும் அறிமுகப்படுத்தியவன். மட்டுமல்லாது, அரசியல் ரீதியாக முதலாவது தேர்தல் மேடையிலிருந்து கடைசித் தேர்தல் மேடைவரை மஷூர் ஹாஜியாரை மக்களிடையே கொண்டு சென்றவன். சுவரொட்டிகளும் அறிக்கைகளும் துண்டுப்பிரசுரங்களும் அச்சடித்து வினியோகித்தவன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, கண்ணீர் விட்டு அழுது, மன்றாடி, மஷூர் ஹாஜியாருக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொடுத்த இருவரில் ஒருவன் நான். அதனால்தான் இப்போது ரிசாத் நம்மைக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்துவது கண்டு கூச்சமும் சங்கடங்களும் நமக்குள் குமிழியிட்டு எழுந்தன.

ஆனால் ரிசாத் பெருந்தன்மையோடும் பேரன்போடும் நடந்து கொண்டார். அது மட்டுமல்ல, அரசியலில் அவர் உச்சம் தொட்ட நேரங்களில் கூட எப்போதாவது தொலைபேசியில் பேசும்பொழுது “ சேர்…” என்று அதே மரியாதையுடன்தான் அழைக்கிறார்.

ரிசாதுடன் ஒரு சில பயணங்களில் நான் இணைந்திருக்கிறேன். அந்தப் பயணங்களின் போது நான் முஸ்லிம் மாணவர்களின் கல்வியின் முன்னேற்றம் பற்றிப் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் அதுபற்றி நிறையத் திட்டங்கள் வைத்திருந்தார். அந்தத் திட்டங்கள் அனைத்தையும் மாணவர்களுக்கான ஸகொலர்ஷிப், மானியம் மற்றும் மறைமுக ஊக்குவிப்பு என்ற வகையில் அவர் இன்றுவரை செயலில் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

முஸ்லிம் அகதிகள் பற்றியும் அவர்களின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் பற்றியும் நான் அவரோடு சம்பாஷித்திருக்கிறேன். அந்த நேரங்களில் அவர் “ஓம் சேர்… போரினால் அப்பாவித் தமிழ் மக்கள் கூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மீட்சிக்காகவும் நாம் உழைக்க வேண்டும்!” என்று உண்மையான இரக்க குணத்தோடு சொல்வார்.

ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் மீது நமக்கிருந்த வெறுப்பையும் கோபத்தையும் போன்றே அவருக்குமிருந்தது. சிரியாவில், ஈராக்கில், லிபியாவில் அந்த பயங்கரவாத இயக்கத்தினால் ஒன்றுமறியாத மக்கள் கொல்லப்படுவதை அவர் மிக வன்மையாகக் கண்டிப்பவராகவும் அத்தகைய ஈனச்செயல்களை அடியோடு வெறுப்பவராகவுமிருந்தார்.

முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றித் தமிழ், சிங்கள மக்களையும் நேசிக்கும் மனிதத்துவம் மிக்கவராகவே அவர் அன்றும் இன்றுமிருக்கிறார். அவரிடம் பொதுவான ரீதியிலும் தனிப்பட்ட வகையிலும் பாரிய உதவி பெற்ற தமிழ், சிங்கள மக்கள் ஏராளம்!

பயங்கரவாதம் என்பதோ, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பதோ ரிசாதிடம் மருந்துக்குக் கூட இருக்க முடியாது. ஏனெனில் அவர் உண்மையான முஸ்லிம். ஓர் உண்மையான முஸ்லிம் எச்சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டான்.

ஆக, ரிசாத் என்ற ஆளுமையின் மீது அரசியல் அழுக்காறும் காழ்ப்புணர்வும் காரணமற்ற பகைமையும் கொண்ட நபர்களே இன்று அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகிறார்கள். அதற்காகக் கற்பனைக் காரணங்களை சோடித்திருக்கிறார்கள். இதில் அவர்கள் தோற்பார்கள். ரிசாத் பெருவெற்றி பெறுவார். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

ரிசாத் என்ற தங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நெருப்புக்குள் வீசப்பட்டிருக்கிறது. அந்த நெருப்பில் புடம் போடப்பட்டு, புத்தொளியோடு முன்னரைவிடப் பன்மடங்கு பிரகாசமாய், ஜெகஜோதியாய் இந்தத் தங்கம் ஜொலிக்கத்தான் போகிறது.

இன்ஷா அல்லாஹ்!

-எஸ்.எச். நிஃமத்-

Related posts

ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும்

wpengine

பள்ளிவாசல்களில் ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்க வேண்டும்.

wpengine

யாழ் மாநகர சபையில் நிதி மோசடி! விசாரணை வேண்டும்

wpengine