Breaking
Sat. May 4th, 2024

சாய்ந்தமருது இக்பால்

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் விவகாரம் இன்று நாட்டின் பேசுபொருளாக மட்டுமல்லாமல் அது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

றிசாத் பதியுதீன் தடுப்புக்காவலில் உள்ள நிலையில், அவரது வீட்டில் பணியாற்றிய மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணம் பலவித சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இந்த சம்பவமானது, றிசாத் பதியுதீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மேலும் சிக்கல்களை அதிகரிக்கும் நோக்கில், எதிரிகள் அந்த சிறுமியை திட்டமிட்டு கொலை செய்தார்களா ?

அல்லது தற்செயலாக ஏற்பட்ட தீயின் காரணமாக சிறுமி எரியுண்டாளா ? அல்லது தற்கொலை செய்தாளா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? அல்லது தூர நோக்கில் திட்டமிட்டு அங்கு வேலைக்கு அனுப்பப்பட்டாளா ?

அல்லது சிலர் கூறுவதுபோன்று எஜமானர்களின் உறவினர்களினால் கொலை செய்யப்பட்டாளா ? என்ற நீதியான விசாரணைகள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அவ்வாறு நீதி விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே வீணாக எழுகின்ற சந்தேகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுடன், குற்றமற்றவர்களை காப்பாற்ற முடியும்.

இறுதியாக றிசாத் பதியுதீனின் வீட்டில் ஏழு மாதங்கள் பணிபுரிந்தாலும், அவள் கொழும்பில் சுமார் நான்கு வருடங்களாக அதாவது தனது பன்னிரெண்டு வயதிலிருந்து வீட்டு வேலை செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அவளது தாய் வேறு ஒரு திருமணம் முடித்துள்ளதனால் ஹிஷாலினிக்கு குடும்ப அரவணைப்பு இல்லாதிருந்திருக்கின்றது.  

ஒரு பொதுவான உண்மை உள்ளது. அதாவது றிசாத் பதியுதீன் மட்டுமல்ல, எவராக இருந்தாலும், தாங்கள் வசிக்கின்ற வீட்டில் யாராவது மரணமடைவதனையோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுவதனையோ விரும்ப மாட்டார்கள். அவ்வாறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எழப்போகும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றி அறியாதவர்கள் அல்ல.

அதிலும் றிசாத் பதியுதீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆட்சியாளர்களினால் இன்று ஏற்பட்டுள்ள இறுக்கமான அரசியல் பழிவாங்கல் நடைபெறுகின்ற சூழ்நிலையில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

சிறுவர், சிறுமிகளை வேலைக்கு அமர்த்துவது குற்றம்தான். ஆனால் வறுமை காரணமாக அவர்களை வேலைக்கு அனுப்புகின்ற பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு.  

மற்றும் இவ்வாறான மக்களின் வறுமையை கூறிக்கூறி காலமெல்லாம் அரசியல் செய்துகொண்டு மொத்தமாக கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்ற அரசியல்வாதிகளுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.

ஹிஷாலினி மட்டுமல்ல மலையக சிறார்கள் ஏராளமானோர் தங்களது குடும்ப வறுமை காரணமாக கொழும்பு போன்ற நகரங்களில் வீட்டு வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

வறுமையை போக்க வேலை கிடைக்குமா என்ற கவலையில், வேலை தேடி அலையும்போது வீட்டு எஜமானர்கள் தெய்வமாகவே பார்க்கப்படுவார்கள். ஆனால் இவ்வாறான துன்பகரமான சம்பவங்கள் ஏற்படுகின்றபோதுதான் விசாரணை முடிவடையமுன்பே எஜமானரை நோக்கி விரல் நீட்டப்படுகின்றது.

இன்று ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் அழுத்தமாக குரல் கொடுத்துவருகின்றார்கள். அதில் பொதுவான ஓர் வாக்கியத்தினை அவதானிக்க முடிகிறது. அதாவது “எந்தவித தலையீடுகளுமின்றி நேர்மையான முறையில் விசாரணைகள் இடம்பெற வேண்டும்” என்பதுதான் அந்த பொதுவான வாக்கியமாகும்.

அதாவது இந்த மரணம் தொடர்பில் விசாரணை செய்வதில் ஏதாவது தலையீடுகள் உள்ளதா ? என்ற சந்தேகம் எழுகின்றது. அவ்வாறென்றால் தலையிடுபவர்கள் யார் ? குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுபவர்கள் யார் ?

இந்த விசாரணைகளில் தலையீடு செய்வதென்றால், அது அதிகார தரப்பினால் மட்டுமே முடியும். அவ்வாறென்றால் றிசாத் பதியுதீன் தன்னை விடுவிப்பதற்கே அதிகாரமற்றவராக தடுப்புக்காவலில் இருக்கின்ற நிலையில், ஹிஷாலினியின் விசாரணையில் தலையீடு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

எது எப்படி இருப்பினும் இதுபோன்று முஸ்லிம் சிறுமிக்கு ஏற்பட்டிருந்தால், அது என்றோ மூடி மறைக்கப்பட்டிருக்கும். அதாவது தமிழ் அரசியல்வாதிகள்போன்று மூர்க்கத்துடனும், ஓர்மத்துடனும், அழுத்தமாகவும் குரல் கொடுக்கும் ஆற்றல் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரிடமும் இல்லை என்பதுதான் கவலையான விடயமாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *