மியன்மாரில் இருந்து தப்பி வர முயன்ற ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 20 பேர் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் இடம்பெற்று வரும் வன்முறை காரணமாக அங்கிருந்து தப்பி வந்தவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் குறித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் வன்முறை நீடித்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 27,400 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பங்களாதேஷில் அடைக்கலம் கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வந்தவர்கள் சுகயீனமுற்ற நிலையிலும், துப்பாக்கி குண்டு பட்ட காயங்களுடன் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 11 பேரின் சடலங்களும், 9 பெண்களின் சடலங்களும் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் கரையொதுங்கியுள்ள நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (30) மியான்மரில் இருந்து இவ்வாறு தப்பி வந்த படகு மீது அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.