சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கண்டி தலதா மாளிகை விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் இன்று (30) சந்தித்திருந்தார்.
அதன் பின்னர், கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வகட்சி அரசாங்கமே சிறந்த வழி என்றும் அதில் ஒன்றிணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
மேலும் தனது வீடு எரிக்கப்பட்டுள்ளமையால் ரணில் கோ ஹோம் என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் தயவு செய்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஏனெனில் தனக்கு வீடு இல்லை என்றும் வீடு இல்லாமல் இருப்பவரை வீட்டுக்கு போகச்சொல்வதில் அர்த்தம் இல்லை என்றும் அவர்கள் தயார் எனின் பெருந்திரளான மக்களை கொண்டுவந்து தனது வீட்டை கட்டித் தருமாறும் தெரிவித்தார்.
அதன்பின்னர், வீட்டுக்கு அருகில் வந்து ரணில் வீட்டுக்கு போ என்று சொல்லுமாறும் குறிப்பிட்டார்.