யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிப்பதாவது – விழித்திரை சத்திர சிகிச்சை ஆனது சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்பொழுது விழித்திரை சத்ர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஷைலா பரதன் பதில் கடமையேற்றுள்ளார்.
அவர் தமது சேவையினை மக்களுக்கு வழங்கு முகமாக வாரத்துக்கு ஒரு முறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை இன்று (23) முதல் மேற்கொள்ள உள்ளார்.
ALAKA Foundation, Malaysia நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இந் நிகழ்ச்சித் திட்டமானது யாழ். போதனா வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.