Breaking
Fri. Apr 26th, 2024

(சுஐப் எம் காசிம்)

தேர்தல் காலங்களில் தமக்குப் பிடிக்காத கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை துரோகிப்பட்டம் சுமத்தி அவர்களைத் திட்டமிட்டு தோற்கடிக்கின்றனர். பின்னர் தோற்கடிக்கப்பட்ட அந்த வேட்பாளர்கள் சமூகத்தின் மீது கொண்ட பற்றுதலினால் மக்கள் பணியாற்றும் போது அவர்களை சமுதாயக்காவலர்களென போற்றுகின்றனர். இவ்வாறான நிலையிலே தான் நமது சமூகம் இன்று இருக்கின்றதென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பட்டிருப்பு கிராமத்தில் பிரதியமைச்சர் அமீரலியின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட முன் பள்ளிப்பாடசாலை கட்டிடத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.c2132a83-a6ef-4ec2-a80c-4b2c19686e96

இந்த விழாவில் கௌரவ அதிதிகளாக பிரதியமைச்சர் அமீரலி, பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் ஆலோசகருமான சோ கணேசமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ், கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் தங்கவேல், பிரதேச சபைச் செயலாளர் கலாநிதி பூபாலப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டு இங்கு உரையாற்றினர்.

அமைச்சர் இங்கு கூறியதாவது,

கடந்த பொதுத் தேர்தலில் பண்பான உள்ளம் கொண்ட அரசியலில் அனுபவம் மிக்க முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி அவர்கள் போட்டியிட்ட போதும் அவரால் வெற்றி பெற முடியாது போய்விட்டது. மாற்றுக்கட்சி காரர்களால் அவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். எனினும் அவர் உங்களை விட்டு ஓடாமல் உங்களில் ஒருவராக நின்று உதவி வருகிறார். அவர் வெற்றி பெற்றிருந்தால் இந்தப்பிரதேசம் பல்வேறு வழிகளிலும் அபிவிருத்தி கண்டிருக்கும்.  எனினும் அவர் தோற்கடிக்கப்பட்டமை மூலம் மட்டக்களப்பு வாழ் அப்பாவிச்சமூகம் தோற்றிருக்கிறது என்பதே எனது பணிவான கருத்தாகும். இதன் மூலம் வருங்கால சமூகத்துக்கு நாம் துரோகமிழைத்திருக்கிறோம்.

பாராளுமன்ற தேர்தலிலோ ஜனாதிபதி தேர்தலிலோ நாம் உரிமை பற்றி பேச முடியும். அது மட்டுமன்றி தமிழ் சமூகத்திற்கு கடந்த காலங்களில் பேரினவாதிகளால் இழைக்கப்பட்ட அநியாயங்களை உணர்த்த முடியும். எனினும் ’உரிமை உரிமை’ என்று மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் நமது பிரதேசம் அபிவிருத்தியடையாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு நாம் இனியும் காரணமாக இருந்துவிடக்கூடாது. கடந்த காலத்தில் விடப்பட்ட வரலாற்றுத்தவறுகள் தான் இந்தப்பிரதேசத்தின் பின்னடைவுக்கு காரணம். இனி வரும் காலங்களில் புத்திசாலித்தனமாக நடந்தால் நாம் விமோசனம் அடைய முடியும். தவறுகளை திருத்திக்கொள்வதற்கு உள்ளூராட்சித்தேர்தல் சிறந்த களமாக இருக்க போகின்றது. இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் யுத்தகாலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இந்த பிரதேசத்தை கட்டியெழுப்ப முடியும்.

எங்களிடம் இனவாதமோ மதவாதமோ இல்லை. கிழக்கு மாகாணத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியிலும் எத்தனையோ சிரமங்களை தாண்டி களுவாஞ்சிக்குடியில் சதொச வை நிறுவி உங்களுக்கு நாம் பணியாற்ற முடிவு செய்தோம். அதே போன்று வளம் கொழிக்கும் இந்த பூமியில் பல்வேறு அபிவிருத்திகளை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கோ தமிழர்களின் கோரிக்கைகளுக்கோ நாம் என்றுமே இடைஞ்சலாக இருந்ததில்லை. அதே போன்று எதிராக பேசியதுமில்லை. நாம் இழந்தது போதும் இழப்பதற்கு எதுவுமில்லை. ஏமாந்ததும் போதும். இனியும் ஏமாறக்கூடாது. நாம் பட்ட அவஸ்தைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. தாய் பிள்ளையை பறி கொடுத்தாள், கணவன் மனைவியை இழந்தான், தந்தை மகளை இழந்தார், சகோதரன் சகோதரியை இழக்க நேரிட்டது. பால் குடி மாறாத பச்சிளம் குழந்தைகளுக்கு முன்னால் தாய் இரத்த வெள்ளமானாள். யுத்தத்தின் வடு இன்னுமே ஆறவில்லை.

கடந்த காலத்தில் ஓர் இனத்தின் இரத்தத்தை பார்த்து மற்றைய இனம் மகிழ்ச்சியடைந்தது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காணவில்லை என்று அந்த சமூகம் கதறியழுத போது மற்றைய சமூகம் குதூகலித்தது. இவ்வாறு ஒருவருடைய துன்பத்திலே மற்றவர் இன்புறும் நிலையே அப்போது இருந்தது. எனினும் இந்த நிலை இப்போது படிப்படியாக மறைந்து வருகின்றது.

இழப்புகள் எல்லோருக்குமே வந்தன. நானும் ஓர் அகதி தான். இந்த அகதி வாழ்க்கையில் நாம் பட்ட துன்பங்கள் சொல்லொணாதவை. எனவே இந்த சமாதான காலத்தில் தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களை மறந்து நாம் சகோதரத்துவத்துடன் வாழப் பழக வேண்டும். மதத்தைக்காரணம் காட்டி நாம்  பிரிந்து விடக்க்கூடாது. எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வு ஒன்று ஏற்பட்டால் நாம் ஒரு படி மேலே சென்று அதனை ஆதரிக்க என்றுமே தயாராக உள்ளோம்.

அரசியல் இருப்புக்காக அரசியவாதிகள் மக்களை பகடைக்காய்களாக மாற்றக் கூடாது இதுவே என் அன்பான வேண்டுகோளாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *