யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள் பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்” கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் ,நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையே காணப்படும் முரண்பாடு காரணமாகவே இப் பிறப்பு தொடர்பான பதிவை மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் தொடர்பாக உரிய கண்காணிப்பை மேற்கொள்ளுதல் தொடர்பிலும், இதன்போது பேசப்பட்டது.
அத்துடன் ஒரு சில சிறுவர் இல்லங்கள் மாவட்ட செயலக அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை எனவும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது. அதுமட்டுமல்லாது யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. குறிப்பாக தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது.