முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது
பாம்பின் காலை பாம்பே அறியும் என்பார்கள். அதுபோல் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அரசியல்வாதிகளினாலேயே நன்றாக அறிய முடியும்.
பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து தனது முதலாவது பேச்சிலேயே அரசாங்கத்தின் கொள்கைகளை வன்மையாக கண்டித்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
அவ்வாறு உரையாற்றி ஒரு வாரமும் முடியவில்லை. ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்சவோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்கின்ற புகைப்படம் ஊடகங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டது.
இரு தரப்பு கட்சிகளின் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் வசைபாடிக்கொண்டு பகைமை உணர்வுகளை வெளிப்படுத்துகையில், தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்பதானது ஆச்சரியப்படக்கூடியதல்ல. இதற்கு பெயர்தான் அரசியல்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தலைவர்கள் மக்களுக்கு முன்பாக நடிக்கின்றார்கள் என்று எடுத்துக்கொள்வதா ? அல்லது கட்சித் தொண்டர்கள் மற்றும் போராளிகள் அறியாமை காரணமாக மற்றவர்களுடன் முட்டி, மோதி வசைபாடுகின்றார்கள் என்று எடுத்துக்கொள்வதா ?
தனது வீட்டில் சுத்திகரிப்பு வேலை செய்கின்ற தொழிலாளி ஒருவருடன் வீட்டு எஜமான் நன்றாக சிரித்து பேசுகின்றார், உறவாடுகின்றார், தொலைபேசியில் பேசுகின்றார் என்பதற்காக எஜமானின் குடும்ப நிகழ்வுகளில் அந்த தொழிலாளியை முன் ஆசனத்தில் அமர செய்வதில்லை.
எப்போதும் அவர் கூலி தொழிலாளி என்ற வரையறைக்குள்லேயே அடங்கப்படுவார். ஆனால் அரசியல்வாதிகள் என்னதான் வசை பாடினாலும், தூற்றினாலும், சிறையில் அடைத்தாலும், தங்களது குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் அவர்களைத்தான் முன் ஆசனங்களில் அமர செய்வார்கள்.
இதற்கு பெயர்தான் வர்க்க வேறுபாடாகும். எப்போதும் அரசியல் தலைவர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளான புதல்விகளின் திருமணம் மற்றும் ஏனைய வைபவங்களில் உயர் பதவி, அதிகாரம் மற்றும் பணக்கார கோடீஸ்வரர்களை மாத்திரமே முன் ஆசனங்களில் அமரச்செய்து முக்கியத்துவம் வழங்குவார்கள்.
முஸ்லிம் காங்கிரசிலிருந்து அதாஉல்லாஹ், றிசாத் பதியுதீன் ஆகியோர் பிரிந்துசென்று தலைவர் ரவுப் ஹக்கீமை கடுமையாக வசை பாடிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், கடும் கோபத்துடன் இந்த இருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற மனோநிலை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் அப்போது காணப்பட்டது.
ஆனால் அப்போது நடைபெற்ற தலைவரின் வீட்டு திருமண நிகழ்வில் முன்வரிசையில் கட்சி போராளிகளோ அல்லது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களோ அமரவில்லை. மாறாக அதாஉல்லாஹ் மற்றும் யார் யாரெல்லாம் தலைவரை கடுமையாக தூற்றினார்களோ அவ்வாறான கோடீஸ்வரர்களே முன்வரிசையில் அமர்த்தப்பட்டார்கள்.
அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் பகிரங்கமாக தூற்றுவதும், வசை பாடுவதும் ஒரு வியாபார தந்திரமாகும்.
இந்த வசைபாடலில் அல்லது தந்திரோபாயத்தில் யார் ஜெயிக்கின்றார்களோ அவர்கள் ஆட்சியை கைப்பற்றுவார்கள். அல்லது தேர்தலில் வெற்றிபெறுவார்கள். மக்களை கவர்வதற்கும், அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கும்தான் தன்னை தூற்றுகின்றார்கள் என்பது மற்றைய தலைவர்களுக்கு நன்றாக தெரியும். இது ஒரு மொத்த வியாபார போட்டியாகும்.
இதற்குத்தான் கூறுவது பாம்பின் காலை பாம்புதான் அறியும் என்று. இந்த உண்மையை புரிந்தவன் புத்திசாலி. புரியாதவன் போராளி அல்லது எடுபிடி அல்லது தொண்டன்.