Breaking
Fri. Apr 26th, 2024

ஊடகப்பிரிவு
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாக்குப்பதிவுகளை, இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாமென, புத்தளம் மாவட்ட பொதுஜன ஜக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சின்தக அமல் மாயாதுன்ன முன்வைத்த யோசனைக்கு எதிராக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.


புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் முதலாவது கூட்டம், இன்று (18) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே, இந்த யோசனைக்கு அவர் தனது பலத்த எதிர்ப்பை வெளியிட்டார்.


அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியன்த ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.


எவரும் எங்கும் வாழ முடியும் என்பதற்கமைய, அவர்கள் விரும்பும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுகளை சட்டத்திற்கு அமைய மேற்கொள்வதே அரச அதிகாரிகளின் கடமையென இந்தக் கூட்டத்தின் போது, புத்தளம் அரசாங்க அதிபர் சந்திரசிறி பண்டார தெளிவுபடுத்தியதுடன், அலி சப்ரி எம்.பியின் கருத்துக்கு வலுச்சேர்த்தார். 


இதன் போது, கடந்தகால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன், புதிய அபிவிருத்திகளை அடையாளம் காண்பது மற்றும் நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களை உரிய முறையில், மக்களின் பயன் கருதி தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து, பாராளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான அசோக பிரியன்த முன்மொழிந்தார்.


இதனையடுத்து, திணைக்களங்களின் அபிவிருத்தி ஆலோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களின் வாக்குப் பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், இதனை நிறுத்தமாறும், அவர்களை தத்தமது பிரதேசத்திற்கு மீள அனுப்புமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சின்தக அமல் மாயாதுன்னயோசனையை முன்வைத்த போது, அலி சப்ரி ரஹீம் எம்.பி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கருத்தை வெளியிட்டார்.


“இந்த மக்கள் கடந்த 30 வருட காலமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பதிவுகள் இங்கு பதியப்பட்டுள்ளன. இவர்கள் புத்தளம் மாவட்ட வாக்காளர்களாக தற்போது மாறிவிட்டனர். ஏனையவர்களும் இங்கு பதிவினை செய்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த புத்தளம் அரசாங்க அதிபர், “எவருக்கும் எங்கும் வாழும் உரிமை உண்டு. இந்த மக்களை பலவந்தமாக, அவர்களது பிரதேசங்களுக்கு மீண்டும் அனுப்ப முடியாது. அரச அதிகாரிகள் என்ற வகையில், நாம் அவர்களது பதிவுகளை சட்ட ரீதியாக மேற்கொண்டே ஆக வேண்டும்” என சபையில் சுட்டிக்காட்டினார்.


இதனை அவதானித்துக் கொண்டிருந்த சபையின் தலைவர், குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்றும் இந்தக் கலந்துரையாடலினை நிறைவு செய்யுமாறும் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *