கட்டுரைகள்பிரதான செய்திகள்

மூதூர் வைத்தியசாலை மு.காவால் புறக்கணிக்கப்படுகிறதா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ,சம்மாந்துறை)

மூதூர் மு.காவின் இதயமென மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபினால் வர்ணிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.மூதூருக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு வரிந்துகட்டி நிற்க வேண்டிய கடமை மு.காவிற்குள்ளதை யாரும் மறுத்துரைக்க முடியாது.

மூதூரில் பல பிரச்சினைகள் உள்ள போதும் அங்குள்ள வைத்தியசாலையில் உள்ள வளப்பற்றாக் குறையே மிகவும் அவசரமாகவும் அத்தியவசியமானதாகவும் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டிய தேவையாக மக்களால் காலத்திற்கு காலம் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.இவ் வைத்தியசாலையினூடக மூதூரில் வாழ்கின்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவதோடு இவ் ஊரை அண்மித்துள்ள ஏனைய சில ஊர்களிலுமுள்ள மக்கள் பயனடைவதும் குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் சிலரால் கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் கூட மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு வளப்பற்றாக் குறையை முன் வைத்து பத்து நாள் போராட்டமொன்று மூதூர் வைத்தியசாலை வாளாகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹ்மதின் மூதூர் வைத்தியசாலையின் குறைகள் விரைவில் நிவர்த்திக்கப்படும் என்ற வாக்குறுதியை அடுத்து அப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

அண்மைக் கலாமாக மூதூர் தென்கிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் இப் பிரச்சினையை ஊடகங்கள்,துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக மீழக் கிளரும் நடவடிக்கையை செய்துவருகிறார்கள்.இவர்களின் நடவடிக்கைகள் சிலதை உற்று நோக்கும் போது இவர்கள் மு.காவிற்கு சேறு பூசும் நோக்கில் இதனை தூக்கிப் பிடிக்கின்றார்களா என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் றிஷாதை சந்தித்த இவ் அமைப்பினர் மு.கா இவ் வைத்தியசாலையை சிறிதும் கணக்கில் கொள்வதாக இல்லை.நீங்களாவது இவ் வைத்தியசாலையை கவனத்திற் கொள்ளுங்கள் எனக் கோரி இருந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்திருந்தது.இது ஒரு கோணத்தில் பார்க்கும் போது அமைச்சர் றிஷாதை புகழ்வது போன்று இருந்தாலும் மறைமுகமாக அமைச்சர் றிஷாத் இது விடயத்தில் இற்றை வரை சிறிதேனும் கவனம் செலுத்தவில்லை என்பதைக் கூறி அவரை இகழ்வதாகவே அமைகிறது (திருகோணமலையில் அமைச்சர் றிஷாத்திற்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநித்தித்துவம் உள்ளது).

அண்மையில் அமைச்சர் றிஷாத் இவ் வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்க சிரத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலையில் மு.காவிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லாத காரணத்தாலும் அ.இ.ம.காவுக்கு திருகோணமலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்ற காரணத்தாலும் திருகோணமலை மாவட்ட மக்கள் மு.காவை விட அ.இ.ம.காவிடம் தங்களது கோரிக்கைகளை உருத்துடன் முன் வைக்க வேண்டும்.

நீங்களாவது செய்து தாருங்கள் எனும் விதமாக கெஞ்சல் வார்த்தைகள் சிறிதேனும் பொருத்தமானவை அல்ல.மு.கா இவ் வைத்திய சாலையின் அபிவிருத்தியில் அக்கறையின்றி இருக்கின்றது என்பதை ஏற்க முடியாது.

இதனை சில விடயங்களை அறிந்து கொள்வதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

 

  • கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர் வைத்தியர் விடுதி ஒன்றை அமைக்கும் நோக்கில் இவ் வருடம் பதினெட்டு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.
  • சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் வைத்திய நிபுணர்கள் விடுதி ஒன்றை அமைப்பதற்காக நாற்பத்து மூன்று மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.இதற்கான ஒப்பந்த அறிவித்தல் (tender notice) வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் நூறு கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியில் மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவை தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.இது ஏறத்தாள நிறைவுறும் தருவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம் மன்சூர் மாகாண அமைச்சராக இருந்த மூன்று வருடங்களிலும் வருடாந்தம் பத்து மில்லியன் ஒதுக்கப்பட்டு மொத்தமாக முப்பது மில்லியனில் ஒரு நோயாளர் விடுதி அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்படும் நிலையில் உள்ளது.
  • கடந்த வருடம் இராஜாங்க அமைச்சராக இருந்த மு.காவின் செயலாளர் ஹசனலியின் காலத்தில் X-RAY இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூரின் காலத்தில் பத்து மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு புதிய நோயாளர் வண்டி (ambulance) ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.மேலும்,இவ் வைத்தியசாலைக்கு இவரின் முயற்சியினால் மருந்துக் களஞ்சியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதோடு வைத்தியசாலையின் கட்டிடங்களை புனர் நிர்மாணம் செய்யும் நோக்கில் நான்கு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் வேலைகளும் முடிவடைந்துள்ளன.
  • முன்னாள்,இன்னாள் மாகாண சுகாதார அமைச்சர்களினால் புதிய தாதியர்கள்,தொழிலாளர்கள்,வைத்தியர்கள் பலர் காலத்திற்கு காலம் தேவையானளவு நியமிக்கப்பட்டிருப்பதோடு தற்போது அப் பிரச்சினை தீர்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீரின் வேண்டுகோலுக்கமைய இவ் வைத்தியசாலைக்கு எச்.எஸ்.டீ.பீ திட்டத்தின் கீழ் மூன்று அபிவிருத்து திட்டங்களுக்காக மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.முதிராக் குழந்தைகள் பிரிவுக்காக 5 மில்லியன் ரூபாயும் கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்திற்காக (improvement of drainage system ) 1.5 மில்லியன் ரூபாயும் தற்காலிக களஞ்சிய சாலைக்காக ஒரு மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலுள்ள சேவைகள் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ் தௌபீக்,மாகாண சபை உறுப்பினர்களான லாஹிர் மற்றும் அன்வர் ஆகியோரின் வேண்டுகோலுக்கமைய குறித்த மாகாண சுகாதார அமைச்சர்,இராஜாங்க அமைச்சர்,பிரதி அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்டமை இங்கு சுட்டிக் காட்டத் தக்க ஒரு விடயமாகும்.

இவ் வைத்தியசாலையில் வைத்தியர்கள் பிரச்சினைகள் நிறைவுறும் தருவாயில் உள்ள போது மூதூர் தென்கிழக்கு பட்டதாரிகள் ஒன்றியம் தற்போது மயக்க மருந்து வழங்கும் வைத்தியர்கள் (அனிஸ்டீசியா) இல்லாத விடயத்தை பெரிதாக தூக்கிப் பிடித்துள்ளது.ஒவ்வொரு வைத்திய சாலைக்கும் இத் துறை சார்ந்த ஒரு வைத்தியர் இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

இவ் வைத்தியசாலையில் ஏற்கனவே கடமையாற்றிய குறித்த துறை வைத்தியரின் இடமாறுதலைத் தொடர்ந்தே இவ் வெற்றிடத்திற்கு உரிய நபரை நியமிப்பதில் சிக்கல் தோன்றியுள்ளது.மு.கவின் பிரதிநிதிகள் குறித்த மயக்க மருந்து வழங்கும் வைத்தியர்களை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரை நேரடியாக சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க வெகு விரைவில் இவ் மயக்க மருந்து வழங்கும் வைத்தியர் நியமிக்கப்டுவதற்கான சாதக நிலைகள் எட்டப்பட்டுள்ளதாக மு.கா தரப்பு தகவல்கள் உறுதிபட கூறுகின்றன.

எந்தவொரு கட்சியாலும் சிறிது சிறிதாகத் தான் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.உடனடியாக அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமென எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.இவ் வைத்தியசாலைக்கு மு.காவினரால்  காலத்திற்கு காலம் சேவைகள் செய்யப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.யார் சேவை செய்தாலும் அவர்களைப் பாராட்டி உச்சாகப்படுத்துவதே சிறந்தது.

அதற்காக சிலதை செய்துள்ளோம் தானே  என மு.கா பொடு போக்காக செயற்படவும் கூடாது.இன்னும் இவ் வைத்தியசாலையில் பல்வேறுபட்ட தேவைகள் மலிந்து கிடக்கின்றன.அவ்வாறு மு.கா பொடு போக்காக இருந்தாலும் பொது மக்கள் மு.காவை அவ்வாறு இருக்க விடவும் கூடாது.

இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தியில் கரிசனை கொண்டுள்ள அமைப்புக்கள் அரசியல் பார பட்சமின்றி முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரையும் இதன் அபிவிருத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவதே பொருத்தாமான வழி முறையாகும்.இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தி நோக்கில் வேறு அரசியல் வாதிகளிடம் செல்லும் போது இன்னுமொரு அரசியல் கட்சியை இகழாது தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது சாலச் சிறந்தது.

குறிப்பு:இக் கட்டுரை 05-04-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தமாக தற்போது, மிக துல்லியமான முறையில் விசாரணை

wpengine

சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது

wpengine

முன்னால் அமைச்சர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

wpengine