Breaking
Thu. May 2nd, 2024

இலங்கை அரசியல் வரலாற்றில் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலந்தொட்டு, கிழக்கு குறிப்பாக அம்பாரை மாவட்டம் பெற்று வந்த பரிணாம வளர்ச்சியின் தடைக்கல்லாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் இருக்கின்றார் என்பதை அவரது 15 பதினைந்து வருட தலைமைத்துவ காலத்தை மக்கள் எடை போட்டதன் விளைவு அவரை விட்டு முழுக் கிழக்கு மாகாணத்தையும் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு முஸ்லிம் சமூகத்தின் எல்லா மட்ட வயதினரையும் ஈர்க்கச் செய்துள்ளது.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் விளைநிலமாக உள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவ அறுவடையை ஒவ்வொரு சீஸன் காலத்திலும் மிகத் திறமையாக அறுவடை செய்யும் ஹக்கீம் தேர்தல் கால விதைப்பாட்டிலிருந்து அறுவடை பெறும் வரையில் கட்சிப் போராளிகளை கொத்தடிமைகளாக இயங்கச் செய்து ஆளுக்னெகாரு மூடை,இரு மூடை எனப் பங்கீடு செய்து விட்டு மீதி எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்துச் சென்று விடுவார்.

நேரடியாகச் சொல்லப் போனால் அம்பாரை மாவட்டத்தில் பெறப்படும் ஆசனங்களையும் அம்பாரை மாவட்ட மக்களும்,திருமலை,மட்டு மாவட்ட மக்களும் முஸ்லிம் காங்கிரஸூக்கு என்று அளித்த வாக்குகளுக்காக வழங்கப்படும் ஏற்கனவே பேரம் பேசப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கையையும் சேர்த்து ஐ.தே.கவிடமோ, ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைமைத்துவங்களிடம் காட்டி அவர் மட்டும் ஒன்றுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளையும் பெறுவாரே தவிர விளை நிலத்தில் அறுவடை செய்து கொடுத்த வயல்காறர்களுக்கு எதுவுமே வழங்கமாட்டார். அம்பாரை மாவட்ட எம்.பீக்கள் தலைவரின் பேராசையினால் மனம் வெதும்பிப் போன சம்பவங்கள் சுமார் 10வருடங்களுக்கு மேலாகின்றன.

அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்த வரை சோல்பரி அரசியல் யாப்பின் தொடக்கத்திலிருந்து கல்முனையைச் சேர்ந்த எம்.எஸ்.காரியப்பர் தகவல் ஒலிபரப்பு அமைச்சராகப் பணியாற்றினார். தஹநாயக்காவின் காபந்து ஆட்சிக் காலத்தில் நிந்தவூரைச் சேர்ந்த எம்.எம்.முஸ்தபா நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.

1975களில் எம்.எம்.முஸ்தபா பிரதி நீதி அமைச்சராகப் பதவி பெற்றார்.1977 பொதுத் தேர்தலின் பின் எம்.ஏ.அப்துல் மஜீட் (சம்மாந்துறை) விவசாய பிரதி அமைச்சரானார்.ஏ.ஆர்.எம்.மன்சூர் மாவட்ட அமைச்சராகவும் பிற்காலத்தில் வர்த்தக வாணிபத்துறை கப்பல் துறைமுகங்கள் அமைச்சரானார்.எம்.ஏ.அப்துல் மஜீட் (கல்முனை) புடவைக் கைத்தொழில் அமைச்சரானார்.

1994களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கப்பல் துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் என இரண்டு அமைச்சுக்களைப் பெற்றார்.மர்ஹூம் யூ.எல்.எம்.மொஹிடீன் ஒரு நாள் மட்டும் சமூக சேவை பிரதி அமைச்சராக இருந்தார்.

2000ஆம் ஆண்டுக்குப் பின் பேரியல் அஷ்ரஃப் (கல்முனை தொகுதி) வீடமைப்பு நிர்மாணத்துறை, புனர்வாழ்வு ஆகிய இரு அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தார்.பின்னர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.எச்.சேகு இஸ்ஸடீன் ஆகியோர் பிரதியமைச்சர்களாக இருந்து பின்னர் மீண்டும் இரு வருடம் கபினட் அந்தஸ்தில்லாத அமைச்சரகளாக இருந்தனர். ஏ.எல்.எம்.அதாஉல்லா பிற்காலத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர்,உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் என ஒன்றன்பின் ஒன்றாக கபினட் அமைச்சராகப் பதவி வகித்தார்.

ஸ்தாகபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் மறைவிலிருந்து தலைமைத்துவததை ஏற்ற தற்போதைய மு.கா.தலைவர் றஊப் ஹக்கீம் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிவாளங்களை கையகப்படுத்திக் கொண்டு தட்டத்தனியே கண்டியிலிருந்து எம்பியாக மாற்றுக் கட்சிகளுடாகவும் தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை பேரம் பேசி பெற்று வந்து அதிகாரங்களைப் பெற்று வந்தார்.

கடந்த காலந்தொட்டு முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியைக் காட்டி 2-4 தேசியப்பட்டியல் எம்.பி வரை பெற்றிருக்கின்றார். 2000ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஹக்கீம் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கவில்லை.ஆனால் அவர் மட்டும் இக்காலத்துக்கிடையே ஆறு,ஏழு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் கண்டி மாவட்ட எம்.பி மட்டுமே.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கூட அம்பாரை திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் மூலம் மூன்று ஆசனங்களும் ஏற்கனவே பேசப்பட்ட பேரத்தின் மூலம் இரண்டு ஆசனங்களுமாக ஐந்து ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில் கூட இங்குள்ள 02 எம்.பிமாருக்கும் வெறும் அரை மந்திரி வழங்கப்பட்டன.ஒன்று விளையாட்டு மற்றது சுகாதாரத்துறை.

இங்கே இன்னுமொரு விடயத்தை நாம் கையாள்வோமானால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர், தேசிய பட்டியல் மூலம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவருக்கு அந்நியமனம் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் வெற்றிடமான மாகாண சுகாதார அமைச்சுப் பதவி அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களுக்கு வழங்கப்படலாம்; என்றிருந்த நிலையில் மத்திய அரசின் சுகாதார பிரதி அமைச்சராக பைஸல் காசீம் எம்.பி அவர்களை நியமனம் செய்வதற்கு உடந்தையாக இருந்த கட்சித் தலைவரின் அரசியல் சாணக்கியத்தை என்னவென்று சொல்வது.

06கிலோ மீற்றர் எல்லைக்குள் ஒருதுறை சார்ந்த இரு அமைச்சர்கள். பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் அவர்களுக்கு வேறு ஒரு பிரயோசனமுள்ள பிரதி அமைச்சர் பதவி வழங்கியிருந்தால் இந்த மாவட்டம் இன்னொரு முன்னேற்றத்தைக் கண்டிருக்கும்.சாணக்கியமுள்ள தலைவருக்கு இதையெல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்.தான் மட்டும் வாழ்ந்தால் போதும்.மற்றவர்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை.என்று எண்ணும் ஒரு தலைவன் கிழக்குக்கு அவசியம் தானா?

மு.கா.தலைவர் ஹக்கமுக்கு இந்த 15 வருட கால பதவி சுகபோகத்தில் கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அவர் தனது மாமனார், மச்சான், சகோதரன், நண்பன் சல்மான், சாரதி என்று தனது ஐந்து உறவுகளால் பாராளுமன்ற கதிரையை அலங்காரம் செய்துள்ளார்.

அதே நேரம் கட்சிக்காக தன் மருமகள் சகோதரி ஆகியோரை துப்பாக்கி வேட்டுக் பலி கொடுத்த கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் ஒருவருக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக் கூட அனுமதி வழங்கவில்லை.

தலைவர் அஷ்ரஃபோடு கட்சியை முன்னெடுத்துச் சென்ற அஷ்ரஃபின் மருமகளின் கணவரும் கட்சிக்காகவும், போரளிகளுக்காகவும் நீதிமன்றங்களில் வழக்காடிய சிரேஸ்ட சட்டத்தரணியும், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமுமான நிஸாம் காரியப்பரின் பெயர் தேசியப்பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவரையாவது சில காலத்துக்கு பாராளுமன்றம் அனுப்பி வைக்காது தனக்கு நம்பிக்கையானவரிடம் தேசியப் பட்டியலை வைத்திருக்க இந்த தலைவர் போட்ட திட்டம் சரிதானா?

பாராளுமன்ற உறுப்பினருக்குரிய வரப்பிரசாதங்கள் சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்ட நிதிகளைப் பெற்ற அல்லது பெறக் கூடிய நிலையில் இருக்கின்ற அமானிதத்தை தலைவர் இன்னும் வைத்திருப்பதன் மர்மம் என்ன?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் ஐ.தே.கட்சியன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து கொண்டு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கும், அவர்களின் அபிலாஷைகளுக்கும் எவ்வாறு பங்களிப்புச் செய்யப் போகின்றார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகக் கர்ஜிக்கும் சிங்கமாக தன்னைக் காட்டி மக்களை இன்னும் நம்ப வைத்துக் கொண்டு கண்டியில் மஹாநாயக்க தேரர்களிடம், பௌத்த சிங்கள மகா ஜனங்களிடம் தன்னை ஒரு பசுவாகக காட்டிக் கொள்ள இவர் போடும் வேஷம் இன்னும் எத்தனை நாளைக்குச் செல்லுபடியாகும்.

மறைந்த தலைவர் அஷ்ரஃப் 2000ஆம் ஆண்டிலேயே இனவாத அரசியல் சரி வராது என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விடுபட்டு தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் களமிறங்க முற்பட்ட போது அகால மரணத்தைத் தழுவியதையடுத்தே ஹக்கீம் தனக்குத் தலைவரின் எதிர்கால அரசியல் போக்குப் புரிந்திருந்தும் அவற்றைக் கணக்கில் எடுக்காது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கையிலெடுத்து அப்பாவிகளான கிழக்கிலங்கை முஸ்லிம்களை அரசியல் இனவெறியூட்டி கொத்தடிமைகளாக வளைத்துப் போட்டு வைத்திருக்கின்றார்.

ஏதுமறியாத இந்த அப்பாவி மக்கள் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் காலத்தில் இயற்றப்பட்ட ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்ற பாடலையும்,லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கட்சியின் கீதத்தையும் கேட்டு மறைந்த தலைவனின் உணர்வில் தம்மை புழுவாகத் துடிக்க வைத்து மரத்துக்கு தம் உயிரையே அர்ப்பணிக்கும் அளவுக்கு திடசங்கற்பம் கொள்வர். இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தும் தலைவரும் தற்போது அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள மாற்றுக்கட்சியினரும் கூட்ட மேடைகளில் பாடலை ஒலிக்கச் செய்து தலைவருடன் கையடித்து ஆடிப்பாடி மகிழ்வதும் போராளிளுக்கு உற்சாகம் ஊட்டும் விடயம் தான்.

ஓவ்வொரு தேர்தல் காலத்தின் போதும் பேரினவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தம் ,பேரம் என்பன பேசப்பட்ட போதும் அதில் ஒன்றாவது சமூகம் சார்புடையதல்ல. மறைந்த தலைவரின் வேலைத்திட்டங்கள் எதுவும் அவர் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவில்;லை.

பாராளுமன்றத்தில் எமது ஆசனங்களை அதிகரிப்பதில் மாத்திரம் எமது உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பதெல்லாம் வெறும் சலுகைகளையல்ல உரிமைகளைத்தான் என்பதனைத் தலைமைத்துவம் அறிய வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம் எங்களிலிருந்து ஆளுனர் வேண்டும்,அரசாங்க அதிபர் வேண்டும்,உயர்மட்ட அதிகாரிகள் வேண்டும் என்றெல்லாம் கேட்கின்றோம்.ஆனால் எங்கள் தலைமை எங்களது மக்களால் சம்பாதிக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்புரிமைகளைக் கூட தனது உள்வீட்டுச் சொந்தக்காரருக்கே வழங்கும் போது நாம் எப்படி பெரும்பான்மையிடம் எமது குறைகளைக் கூறி நிவர்த்தி செய்ய முற்படுவது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரென்றால் எமது மாவட்ட,பிரதேச மக்களின் பிரச்சினைகள் பற்றி அறிந்திருப்பார்.சாதாரணமாக வாக்களித்த ஏழை,எளிய மக்கள்,தொழிலாளர்கள்,விவசாயிகள்,மீனவர்கள் எவருமே இவரைச் சந்திக்க முடியாது.ஆனால் எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என சில குழுவினரைத் தவிர வேறு யாரும் கொள்ளுப்பிட்டி அல்பிரட் பிளேசுக்கோ,அமைச்சுக்கோ செல்ல முடியாத நிலை.இவரைச் சந்திப்பதற்கு ஒரு வாக்காளர் ரூபா 5000.00 ஐ பயண,தங்குமிட,சாப்பாட்டுச் செலவாக செலவு செய்ய வேண்டும்.இது எத்தனை பேருக்குக் கட்டுப்படியாகும்.

அம்பாரை மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தயா கமகே அமைச்சராகவும் அவரது மனைவி பிரதி அமைச்சராகவும் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கு பணி செய்யும் போது தேசியப் பட்டியல் உட்பட 05 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கு வழி வகுத்த அம்பாரை மாவட்டம் அம்போ என்று விடப்பட்டுள்ளது.

கொழும்பில் மனோ கணேசன்,மலையத்தில் திகாம்பரம் போன்றவர்கள் தமக்குக் கிடைத்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு அவர்களுடைய சமூகத்துக்கு ஆற்றும் பணிகளைப் போல் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சராகி தம் மக்களுக்குப் பணியாற்ற முதுகெலும்பு இல்லாமற் போனது தான் கவலை.கடந்த 10 வருடங்கள் இந்த தொய்வு நிலை காணப்பட்ட போதிலும் இம்முறை அமைச்சரவையிலும் இவர்கள் எல்லோரும் கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு மு.கா தலைவரின் தயவில் எத்தனை காலத்துக்கு இம்மக்களை கொத்தடிமைகளாக வைத்தி ருக்கப் போகின்றனர்.

மைதானம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் காசு ஒதுக்குவதன் மூலமோ வைத்தியசாலைக்கு 100 நுளம்பு வலைகளை வழங்குவதன் மூலமோ சமூகம் அபிவிருத்தி கண்டு விடுமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலையும் அவர்களின் தியாகங்களையும் சற்று கழுத்தை நீட்டிப் பார்த்தால் தெரியும். அவர்களின் சாணக்கிய அரசியல் நகர்வுகள் மூலம் யாழ், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரைஆகிய மாவட்டங்களில் அவர்களின் கண்ணசைவில் சகல காரியங்களும்,அபிவிருத்திகளும் திறம்பட நடந்தேறுவதை மு.கா.அறியாமலிருப்பது புதுமையாய் இருக்கிறது.

வெறும் அபிவிருத்தி மாயையை 15 வருடங்களாக் காட்டிக் காட்டி மறைத்து மறைத்து இன்னும் எத்தனை நாளைக்கு கிழக்கு மக்களை தேர்தலுக்கு மட்டும் வாக்களிக்கும் விசையூட்டும் பொம்மைகளாக வைத்திருப்பது என்பதனை மு.கா.தலைமை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கலாபூஷணம் – கலை,இலக்கிய வித்தகர் – மீரா.எஸ்.இஸ்ஸடீன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *