கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீம் தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி!!!

(துறையூ ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ தோல்வியைச் சந்தித்தமையே அதிலுள்ள விசேடமாகும்.இவர் எப்படி யாரால் தோற்கடிக்கப்பட்டார் என்பதே இவ் விடயத்தில் சிந்திக்கத்தக்கது.தன்னிடமிருந்த ஆட்சிப் பலத்தால் பலரையும் எதிர்த்திருந்தார்.

இவர்களால் என்ன செய்ய முடியுமெனக் கருதிச் செயற்பட்டதாகவே பலரும் கருதினர்.காலம் செல்லச் செல்ல பழி வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.அவரின் சர்வதிகாரப் பாணியில் அமைந்த ஆட்சி முறை பலரையும் அதிருப்தி கொள்ளச் செய்திருந்தது.பலரும் உள்ளுக்குள் வெம்பிக் கொண்டாலும் வெளிக்காட்ட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.சிலர் பதவி பட்டங்களுக்காக அவருடன் ஒட்டிக்கொண்டிருந்தனர்.இவர்கள் அனைவரும் எப்போது மஹிந்தவை வீழ்த்தலாமெனக் காத்துக்கொண்டிருந்தனர் என்பதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் கூறி நிற்கும் ஒரு விடயமாகும்.

இவ்வாறான சூழ் நிலையில் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களை நோக்கி வந்தது.மஹிந்த ராஜ பக்ஸவால் பழி வாங்கப்பட்டவர்கள்,புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரை பொருந்திக்கொள்ளாதவர்கள் அவரின் எதிரிகளென அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று கூடினர்.இந்தக் கூட்டை மஹிந்தவால் எதிர்கொள்ள முடியாத நிலையில் தோல்வியைத் தழுவியிருந்தார்.இதனை இலங்கையில் இடம்பெற்ற ஒரு தேசிய அரசியல் புரட்சியாகவும் வர்ணிக்கலாம்.இது போன்றே கடந்த பதினைந்து வருட அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் தலைமைத்துவத்திற்கு எதிராக மா பெரும் புரட்சியொன்றை முன்னெடுக்க பலரும் தயாராகிவருகின்றனர்.

மு.காவின் பழம் பெரும் போராளிகள் பலர் பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.மு.கா தலைமைத்துவத்தின் பல செயற்பாடுகள் சர்வதிகாரப் போக்கில் காணப்படுகிறது.கடந்த காலங்களில் மு.கா மக்கள் நலனில் அவ்வளவு கரிசனை கொண்டதாகவும் அறிய முடியவில்லை.திவிநெகும,பதினெட்டாம் அரசியல் சீர் திருத்தம் ஆகிய விடயங்களில் மு.காவின் செயற்பாடு மக்களிடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது.தற்போது மு.காவில் எஞ்சியிருப்பவர்களில் அதிகமானவர்கள் கொள்கை ரீதியான அரசியலில் உறுதியாக இராது பதவி ஆசையில் திளைத்திருப்பவர்களாகவே அவர்களது செயற்பாடுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

அஷ்ரப் காலத்து மு.காவின் மூத்த போராளிகளில் அதிகமானவர்கள் மர்ஹூம் அஷ்ரபின் வார்த்தைக்கு மாறாக அமைச்சர் ஹக்கீமின் செயற்பாட்டால் ஓரத்தில் நின்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.கரையோர மாவட்டம் என எங்கும் பார்த்தாலும் கூக்கிரலிடும் மு.கா அதனை சாதிக்க முடியுமான அரசியலமைப்பு மாற்றம் நிகழும் இக் காலத்தில் மௌனியாக நிற்கின்றார்கள்.அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரை மு.காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாருமே சந்தித்திருக்கவில்லை.இப்படி அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் தலைமைத்துவப் பிழைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.சுருக்கமாக சொல்லுவதானால் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவால் முஸ்லிம் சமூகம் எதுவித பயனையும் அடையவில்லை.இதற்கெல்லாம் மு.கா தலைமைத்துவத்தின் செயற்பாடே பிரதான காரணமாக பலராலும் முன் வைக்கப்படுகிறது.இந்தக் கட்சியை மக்கள் மர்ஹூம் அஷ்ரப் மீது கொண்ட கண் மூடித் தனமான பற்றின் காரணமாக எதனையும் பார்க்காது ஆதரித்து வருகின்றனர்.இதன் காரணமாக மு.கா தலைமைக்கு எதிரான புரட்சி காலத்திற்கு தேவையான ஒன்றாக நான் கருதுகிறேன்.இந்தப் புரட்சி மூலம் மு.காவின் தலைமைத்துவம் மாறுகின்றதோ இல்லையோ அமைச்சர் ஹக்கீமின் சில அணுகு முறைகள் மாற்றமடையும் என்பதில் ஐயமில்லை.

அன்று மஹிந்தவின் அழிவு எப்படி அவரது கட்சியின் செயலாளரால் வித்திடப்பட்டதோ அது போன்று இன்று மு.கா தலைமையின் வீழ்ச்சியும் அதன் செயலாளரால் வித்திடப்படுகின்றமை நினைவூட்டத்தக்கது.ஹசனலியின் அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகளை விட்ட ஹக்கீம் சில நாட்களில் எதிர் அறிக்கைகளால் ஹசனலியை வீழ்த்த முடியாது என்பதை அறிந்து தேசியப்பட்டியலை வீசி ஹசனலியை தன் வலைக்குள் இழுக்க முயற்சித்தார்.ஹசனலியோ அமைச்சர் ஹக்கீமின் தேசியப் பட்டியல் வலையை நன்கறிந்து கொண்டு அதற்கு சிறிதேனும் சோரம் போகவில்லை.இவ் விடயத்தில் ஹசனலி தேசியப்பட்டியளுக்கு சிறிது அசைந்திருந்தாலும் ஹசனலியின் அத்தனை போராட்டத்தையும் பூச்சியத்தால் பெருக்கி அவரை வீட்டுக்குள் முடக்கச் செய்திருப்பார்கள்.இத்தனை காலமும் அமைச்சர் ஹக்கீமுடன் அரசியலில் கட்டிப் பிரண்ட ஹசனலி இதனை அறியாமலா இருப்பார்? அமைச்சர் ஹக்கீமின் தேசியப்பட்டியல் வலை வீச்சை ஒரு கோணத்தில் ஹசனலியை வீழ்த்துவதற்கான ஒரு செயற்பாடாக நோக்கினாலும் தற்போது அமைச்சர் ஹக்கீமிடம் இருக்கும் தீர்வுகளில் தேசியப்பட்டியலை வழங்கி ஹசனலியை ஆறுதல் படுத்துவதே மிக இலகுவானதாகும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் செயலாளர் அதிகாரத்தின் மீது கை வைத்த செயற்பாடே மு.கா தலைமைத்துவதிற்கு எதிரான புரட்சியொன்றைக் கருக்கொள்ளச் செய்துள்ளது.

தற்போது ஹசனலி மு.காவின் தலைமைத்துவ அதிகாரத்தைக் குறைக்கக் கோருவதாக சில ஊடகங்கள் தெளிவில்லாத செய்தியைப் பரப்பி வருகின்றன.தற்போது ஹசனலி மஷூரா அடிப்படையில் முடிவெடுக்காது செயற்படும் மு.கா தலைமைத்துவத்தின் சர்வதிகாரப் போக்கையே பலமாக எதிர்த்து வருகிறார்.மு.கா என்ற கட்சி பலரதும் மஷூரா அடிப்படையில் முடிவெடுத்து இயங்கிய ஒரு கட்சியாகும்.மர்ஹூம் அஷ்ரப் சில முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டிய நிலையில் கூட குறைந்தது தொலை பேசியிலாவது சிலரது ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுத்ததாகக் கூறி சில மு.காவின் மூத்த போராளிகள் இவ் விடயத்தில் மனம் வெம்பிக்கொள்கின்றனர்.தற்போது மு.காவின் அனைத்து செயற்பாடுகளும் மு.கா தலைவரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு அமையவே நடை பெறுகின்றன.தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள தேசியப் பட்டியல் பகிர்வு,செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டமை ஆகியவை கூட மு.கா தலைவரின் தன்னிச்சையான முடிவுகளால் தான் இத்தனை பெரிய பிரச்சினைகளாக விஸ்வரூபம் எடுத்து எம் முன்னே தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.செயலாளர் அதிகாரத்தை குறைத்தமையைக் கூட ஒரு மஷூராக அடிப்படையில் செய்திருந்தால் அதன் பிற்பாடு அதில் எந்த விதமான பிரச்சினைகளும் எழுந்திருக் வாய்ப்பில்லை.இது போன்று எதிர்காலத்திலும் மு.கா இவ்வாறான தவறுகளைக் விடக் கூடாது என்பதற்காகத் தான் ஹசனலி இதில் இத்தனை கரிசனை கொள்கிறாரென நினைக்கின்றேன்.

ஹசனலி தான் பதவிக்கு ஆசைப்பட்டவனல்ல என்பதை நிறுவ தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கே வழங்குவது பொருத்தமானது எனக் கூறி தனது தேசியப்பட்டியல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தனது போராட்டத்தின் தூய்மையை வெளிப்படுத்திருந்தார்.அவர் அன்று அந்த முற்றுப் புள்ளியை வைக்காது போய் இருந்தால் இன்று அமைச்சர் ஹக்கீம் மீது பற்றுக்கொண்ட சில போராளிகள் மு.காவின் செயலாளர் ஹசனலியை அதனைக் காட்டியே பூச்சியமாக்கிருப்பார்கள்.அது போன்றே தற்போது பஷீர் சேகு தாவூதும் தான் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.பஷீர் சேகு தாவூத்தைப் பொறுத்த மட்டில் அவர் அமைச்சர் ஹக்கீமின் செயற்பாட்டிற்கு எதிராக இன்று நேற்று செயற்பட ஆரம்பித்தவரல்ல.இவரது கடந்த காலச் செயற்பாடுகள் பலவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக இவர் கடந்த ஜானாதிபதித் தேர்தலின் பின்பு பூச்சியமாக இருந்தார் என்பதே உண்மை.அண்மையில் மு.காவின் தலைமையுடன் முரண்பட்ட ஹசனலியின் செயற்பாடு மீண்டும் பஷீர் சேகு தாவூத்தை உயிர்ப்பித்துள்ளது எனலாம்.

பஷீர் சேகு தாவூத் இக் காலத்தில் தான் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளமை தற்போது இடம்பெறவுள்ள கிழக்குப் புரட்சியில் அவர் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை வகிக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இதனை விமர்சனங்களைத் தவிர்த்து இவ் விடயத்தைக் கையாள்வதற்கான அவரது மிகச் சிறந்த அணுகு முறையாகவும் நோக்கலாம்.இன்று இவ்வாறு கூறி விட்டு நாளை மக்களுக்காக மீண்டும் நான் அரசியலுக்குள் வர நிர்ப்பந்திக்கப்பட்டேன் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இதுவெல்லாம் அரசியலில் சாதாரணமாக நடக்கும் ஒன்றாகும்.பஷீர் சேகு தாவூத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு இன்று அவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூற முடியாது.இன்னுமொரு கட்சிக்கு அவர் தாவினாலும் ஏறாவூரில் அவரின் ஆட்டங்கள் எதுவும் சிறிதும் செல்லாத வகையில் அவரை முடக்க மு.காவின் தலைமை ஒரு முதலமைச்சரையும்,ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் உருவாக்கி வைத்துள்ளது.தான் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்றால் பூச்சியமாகிவிடுவேன் என்பதை பஷீர் சேகு தாவூதும் நன்கே அறிவார்.இன்னுமொரு கட்சிக்கு மாறி பூச்சியமாவதை விட மு.காவின் தலைமையை வீழ்த்தி தன் அரசியல் இருப்பை உறுதி செய்வதை அவர் இலகுவாக கருதி இருக்கலாம்.பஷீர் சேகு தாவூத் சிறந்ததொரு அரசியல் இராஜதந்திரி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.இன்னுமொரு புறத்தில் இத்தனை காலமும் தான் செய்த தவறுகளை உணர்ந்து மு.காவை தூய்மைப் படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் தூய்மையாக குதிப்பதாகவும் நோக்காம்.

அன்று எவ்வாறு மஹிந்தவைத் தோற்கடிக்க ஒரு புரட்சிக் கூட்டு உருவாகியதோ அவ்வாறே இன்று கிழக்கில் மாபெரும் புரட்சியொன்றை மு.கா எதிர்கொள்ளப்போகிறது.இந்த புரட்சியில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் கொள்கையில் முரண்பட்டுச் சென்ற பலரும் ஒன்றிணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.இந்த கிழக்கின் எழுச்சிப் புரட்சிக்கும் மு.காவின் ஸ்தாபாக பொருளாளர் வபா பாறூக் தலைமை தாங்கினாலும் அவர் இப் போராட்டத்தை முன்னின்று நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.ஏனெனில்,மு.காவின் செயலாளர் ஹசனலியின் முறுகலைத் தொடர்ந்து அவர் கிழக்கை மையாமாகக் கொண்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருந்ததாக உறுதி செய்யப்பட்ட சில தகவல்கள் வெளிவந்திருந்தன.அதன் பின்னர் அப்படியே அந்தக் கதைகள் மழுங்கடிக்கப்பட்டு வபா பாறூக் தன்னைத் தானே தலைவராக வெளிப்படுத்தியிருந்தார்.இவர் தன்னை இப் போராட்டத்திற்கு தலைவராக அறிவித்திருந்தமை அவர் ஹசனலியை பல வருடங்களின் பின்னர் சந்தித்த ஓரிரு நாட்களின் பின் என்பதை வைத்து இதன் பின் புலங்களை அறிந்துகொள்ளலாம்.

இக் கிழக்கின் எழுச்சிக் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்,வை.எல்,எஸ் ஹமீத்,முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட பல முக்கிய புள்ளிகள் தகுந்த நேரத்தில் தாங்கள் இணைய உறுதியளித்துள்ளதாக நம்பகரமான சில தகவல்கள் கூறுகின்றன.மு.காவின் செயலாளர் ஹசனலி,மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உட்பட பலர் மு.காவிற்குள்ளிருந்து மு.கா தலைமையை வீழ்த்த முயற்சிப்பார்கள் என நம்பப்படுகிறது.அமைச்சர் றிஷாத்துடன் இது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்க குறித்த புரட்சிக் குழு தயார் நிலையிலும் இருந்தது.இந்தக் கூட்டைப் பொறுத்தமட்டில் பல கோணங்களையும் சேர்ந்த நபர்கள் உள்ளமையால் இது மக்களின் உள மாற்றத்திற்கு மிகப் பெரும் வித்திடலைச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

இந்த போராட்டத்திற்கு வபா பாறூக் போன்ற அரசியலில் ஒதுங்கி நின்ற ஒருவரின் தலைமை மிகப் பொருத்தமானது.அப்போது தான் மு.கா தலைமை மிகவும் அழுத்தத்திற்கு உட்படும்.ஹசனலி,பஷீர் சேகு தாவூத் உட்பட ஒரு அணியினர் அமைச்சர் ஹக்கீமை வீழ்த்த மு.காவிற்குள்ளிருந்து போராடுவார்கள்.இதில் இவர்கள் இருவர்களது போராட்டக் கோணங்களும் வேறுபட்டதாக அமையும்.சில வருடங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் பஷீர் சேகு தாவூதிற்கு அஞ்சியே மு.காவின் உயர்பீட உறுப்பினர்களை அதிகரித்த கதைகளுமுள்ளன.கொள்கை ரீதியான அரசியல் செய்ய விரும்புவோர் ஹசனலியின் பின்னால் அணி திரள வாய்ப்புள்ளது.அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாது அரசியலில் இருந்து விலகி நிற்கும் ஒரு அணியினர் இன்னுமொரு கோணத்தில் மக்களிடையே போராடுவார்கள்.இன்று முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.வேறு வழி இன்றி முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களுமுள்ளனர்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளைப் புறக்கணித்து பெருமளவான முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கவிற்கு அளிக்கப்பட்திருந்தன.இப்படியான வாக்குகளை இவ் அணியினர் தங்கள் பக்கம் திசை திருப்ப வாய்ப்புள்ளது.தற்போது கள அரசியலிலுள்ள அதாவுல்லாஹ்,றிஷாத் அணியினர் இன்னுமொரு கோணத்தில் போராடுவார்கள்.இப்படி பல கோணப் போராட்டத்தை மு.கா தலைமை எதிர்கொள்வதை அவ்வளவு இலகுவானதாக கூற முடியாது.கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாஹ்வை இலகுவாக தோற்கடிக்கும் நிலை இருந்தது.இப்படி இருக்கையில் அ.இ.ம.காவின் சவாலை முகம் கொடுக்கவே மு.கா திணறிய விடயம் யாவரும் அறிந்ததே.

தனக்கெதிரான இப் போராட்டத்தை மு.கா தலைமை எதிர்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஹசனலி.பஷீர் சேகு தாவூத் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.இதற்கான அழுத்தங்கள் மு.கா தலைமைக்கு சிலரிடமிருந்து வழங்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.அல்லாது போனால் பல இரகசியங்கள்,மு.காவை வீழ்த்துவதற்கான இலகு வழிகள் வெளிப்பட வாய்ப்புள்ளது.ஹசனலி,பஷீர் சேகு தாவூத் ஆகியோர் மு.கா தலைமைத்துவத்தை வீழ்த்துவதையே குறி வைக்கின்றார்கள்.அமைச்சர் ஹக்கீம் இவர்களையும் வைத்துக் கொண்டு இரகசியங்கள் வெளிப்படாமலும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் மறைமுகமாக தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஓரிரு நபர்களை வைத்துக் கொண்டு தனது அனைத்து விடயங்களையும் கையாள வேண்டும்.இதன் போது அமைச்சர் ஹக்கீம் தன் படையையும் மாற்றான் படையையும் இனங்காண முடியாமல் மிகக்குறுகிய வட்டத்தினுள் முடக்கப்படுவார்.மிகக் குறுகிய வட்டத்தினுள் இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தும் போது அமைச்சர் ஹக்கீமை விட்டும் பலர் விரக்தியுற்று பிரிவதற்கு வழி சமைக்கும்.மேலும்,தனது திட்டங்களை திறம்படச் செய்வதும் சவாலாக அமையும்.

கடந்த மு.காவின் தேசிய மாநாட்டில் செயலாளர்,தவிசாளர்களை பொடி வைத்துத் தாக்கிய அமைச்சர் ஹக்கீம் தற்போது அவர்கள் இருவர் மீதும் எதுவும் செய்ய முடியாமல் அவரது இயலாமையை மக்கள் பார்த்து நையப்புடையும் வண்ணம் பொட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடக்கின்றார்.இவ் விடயம் ஹசனலி,பஷீர் சேகு தாவூத் ஆகிய இருவரையும் கட்சியை விட்டும் நீக்கும் போது அதன் போது எழச் சாத்தியமான எதிர்ப்புக்களை சமாளிக்க மிக நீண்ட காலம் தேவை.இன்னும் குறுகிய காலத்தினுள் கிழக்கை நோக்கி இரண்டு தேர்தல் வர வாய்ப்புள்ளது.இச் சந்தர்ப்பத்தில் இந்த எதிர்ப்பலைகளும் இருந்தால் நிச்சயம் அது மு.காவை அதிகம் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.மேலுள்ள எனது கூற்றுக்கள் சுட்டி நிற்கும் ஒரு விடயம் அமைச்சர் ஹக்கீம் இவ் விடயத்தைக் கையாள எந்த வகையில் செயற்பட்டாலும் அதில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும் என்பதாகும்.

எது எவ்வாறு இருப்பினும் இந்த விளையாட்டு அதாவுல்லாஹ் தரப்பிற்கு சிறந்த பெறுமானத்தை வழங்கப்போகிறது.இந்த மு.காவின் தலைமைத்துவத்தை வீழ்த்தும் போராட்டம் கிழக்கை மையப்படுத்தி எனக் கூறப்பட்டாலும் அம்பாறையில் தான் இதன் வீரியத்தை அவதானிக்க முடிகிறது.அமைச்சர் அதாவுல்லாஹ் மிகவும் சிரமப்பட்டு தன் தளங்களை நிலை நிறுத்த வேண்டிய தேவை இருந்தும் தன் அணிக்கு ஆதரவாக மாபெரும் ஒத்துழைப்பை இப் புரட்சி மூலம் பெற்றுக்கொள்வர்.அம்பாறையை நோக்கி அ.இ.ம.கா படை எடுத்துள்ள நிலையில் சில வேளை இச் செயற்பாடு அதற்குள்ள மிகப் பெரிய தடங்கல்களை சீர் செய்து விடுவதாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்று பலருடைய உள்ளங்கள் மு.காவின் தலைமைத்துவ மாற்றத்தை விரும்புகின்ற போதும் அது எங்கே சாத்தியமாகப் போகிறதெனச் சிந்தித்து தங்களது எண்ணங்களை குப்பையில் வீசிச் செல்கின்றனர்.இப்படித் தான் கடந்த ஜனாதிபதித் தெர்தலிலும் மஹிந்தவை வீழ்த்துவது சாத்தியமாகாத ஒன்று என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.இறுதியில் மஹிந்தவிற்கு என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்ததே.மஹிந்தவின் வீழ்ச்சியை மக்களுக்கு சுட்டிக் காட்டிய ஒரு தேர்தல் தான் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலாகும்.இதன் பின்னர் தான் இலங்கை அரசியலில் மஹிந்தவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றது எனலாம்.இது போன்றே மு.காவின் வீழ்ச்சியை சுட்டிக் காட்டிய ஒரு தேர்தலாக கடந்த பாராளுமன்றத் தேர்தலை நோக்கலாம்.மு.கா அல்லாமலும் ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் உருவாக முடியுமென்பதை அத் தேர்தல் கூறி இருந்தது.அது போன்று அம்பாறை மாவட்டத்தை வன்னித் தலைமை ஆட்டிப் பார்த்திருந்தது.இன்றைய மு.காவால் நுழைய முடியாத இடத்திலும் அ.இ.ம.கா தன்னை நிலை நிறுத்தியுள்ளது.மு.காவின் வீழ்ச்சி கண் முன்னே தாண்டவமாடும் இச் சந்தர்ப்பத்தில் மு.காவை வீழ்த்துவதொன்றும் பெரிதான விடயமல்ல.

குறிப்பு: இக் கட்டுரை இன்று திங்கள் கிழமை 01-07-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

Related posts

இன்னும் விசாரணை முடியவில்லை! ஜனாதிபதி ஆணைக்குழு இன்றுடன் நிறைவு

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால்!ஜனாதிபதியாக இருக்கவிட மாட்டார்.

wpengine

கைத்ததொழில் வளர்ச்சிக்கென யுனிடோ நவீன கட்டமைப்பொன்றை செயற்படுத்துகின்றது அமைச்சர் றிஷாட்

wpengine