Breaking
Sat. May 18th, 2024

மட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதிக்குள் கல்முனை மாநகரசபை முதல்வர் அத்து மீறி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஒன்று கூடிய பெரியகல்லாறு பிரதேச மக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எமது எல்லையை உறுதிப்படுத்துங்கள், உங்கள் கழிவுகளை எங்கள் தலையில் கொட்டாதீர்கள், எமது குழந்தைகளை சுவாச நோய்க்கு பலியாக்காதே, பெரியகல்லாறின் சூழல் சுற்றாடலை அசுத்தம் செய்யாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று கல்முனை மாநகரசபையினால் பெரியகல்லாறு ஊடாக குப்பை லொறிகள் கொண்டு செல்வதை பிரதேச மக்கள் தடுத்த நிலையில், அங்கு வந்த கல்முனை மாநகரசபை முதல்வருக்கும், மாநகரசபை உறுப்பினர்கள் சிலருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது குறித்த பகுதி கல்முனை மாநகரசபைக்குரிய பிரதேசமாகவுள்ளதாகவும், அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை மாநகர முதல்வர் விடுத்ததாகவும் ஆனால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு சொந்தமான பகுதியாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்ட பகுதிக்கு வருகை தந்த மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகளை கண்டித்த அவர் தமது எல்லைக்குள் கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *