கிழக்கு மாகாண பட்டதாரிகள் தமக்கான நியமனங்கள் கிடைக்க முன்னெடுக்கும் போராட்டத்தில் கிழக்கு முதலமைச்சர் மற்றும் அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பகிரங்கமாக கண்டிப்பதன் மூலமே தமது போராட்டத்தை வெல்ல முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தமது நியமனத்துக்கான போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக என்ன செய்யலாம் என மேற்படி பட்டதாரிகள் உலமா கட்சித்தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய அரசாங்கத்தில் இருக்கும் பிரதமரையோ அவரது கட்சியான ஐ தே கவை மட்டும் கண்டித்து போரட்டம் நடத்துவதால் கிழக்கில் எதனையும் பெற முடியாது. காரணம் இத்தகைய போராட்டங்களால் அவர்களின் கட்சிகளுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களின் தரகர்களான முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு மூலம் தேர்தல்களில் வெல்லலாம் என்பதை ஆட்சியாளர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் கிழக்கு மக்களை ஏமாற்றும் ஐ தே கவின் தரகர்களான மு. கா மற்றும் தமிழ் கூட்டமைப்பு, முதலமைச்சர் ஆகியவர்களுக்கெதிராக தமது சத்தியக்கிரகத்தை முன்னெடுக்க வேண்டும். இக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கெதிராகவும் பெயர் கூறப்பட்டு போராட்டம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமது புறோக்கர்களுக்கு விழுகின்ற அடி பிரதமருக்கும் வலிக்கும். இல்லாவிட்டால் கிழக்கு பட்டதாரிகளின் போராட்டத்தினால் கிழக்கில் பெரிதாக வாக்கு வங்கி இல்லாத தமது கட்சிக்கு எந்தப்பாதிப்பும் வராது என்ற மனோ நிலைதான் தொடரும்.