(விடிவெள்ளி)
மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துகின்றன. அனைத்து மதங்களும் கருணையையும் சமாதானத்தையும், இன நல்லுறவுகளையுமே போதிக்கின்றன.
வணக்க ஸ்தலங்களில் மத போதகர்கள் மக்களை நேரிய பாதைக்கு அழைக்கிறார்கள். பாவச் செயல்களிலிருந்தும் தவிர்த்துக் கொள்வதை வலியுறுத்துகிறார்கள்.
எமது நாட்டில் பௌத்த பன்சலைகள், இந்துக் கோயில்கள், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் பலநூற்றாண்டு காலமாக மக்களை நல்வழிப்படுத்தும் நற்பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்று மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய பௌத்த மதபோதகர்கள் மக்களை ஒரு இனத்துக்கு எதிராக செயற்படுத்துவதை அவதானிக்கும் போது கவலையாக இருக்கிறது.
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் அப்பிரதேச பன்சலைகளின் தேரர்களினால் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் தினம் அதிகரித்து வருகின்றன.
சட்டரீதியான பள்ளிவாசல்
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் சட்ட ரீதியானதாகும். இது வக்பு சபையில் 2016 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலொன்றைப் பதிவு செய்வதற்குத் தேவையான சகல ஆவணங்களையும் பெற்றுக் கொண்டே வக்பு சபை இந்தப் பதிவினை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த குருமார் இது சட்டரீதியான பள்ளிவாசல் அல்ல. இது ஒரு மத்ரஸாவாகும் என்றும் மத்ரஸாவையே பள்ளிவாசலாக மாற்றிக் கொண்டார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறாகும்.
பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள்
நோன்பு காலத்தில் முஸ்லிம்களின் சமயக் கடமைகளை முன்னெடுப்பதற்கு இப்பள்ளிவாசலில் இடவசதி போதாமல் இருந்தமையால் பள்ளிவாசல் நிர்வாகம் விஸ்தரிப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்தது.
விஸ்தரிப்பு வேலைகளை முன்னெடுப்பதற்காக பள்ளிவாசல் அமைந்திருக்கும் தெஹிவளை கல்கிசை மாநகர சபையிடம் அதற்கான அனுமதியையும் கோரியது. தெஹிவளை கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்க அதற்கான சட்ட ரீதியான அனுமதியையும் வழங்கினார். தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டே அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் பள்ளிவாசல் விஸ்தரிப்பு வேலைகள் இடம்பெற்றபோது அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பள்ளிவாசலுக்கு வந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் விஸ்தரிப்பு வேலைகளை உடன்நிறுத்திக் கொள்ளும்படியும் வேண்டினார்கள். பள்ளிவாசல் நிர்வாகம் சட்டரீதியான அனுமதி பெறப்பட்டே விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தது.
இதனையடுத்து பௌத்த பிக்குகள் கொஹுவளை பொலிஸில் பள்ளிவாசல் விஸ்தரிப்பு தொடர்பில் முறையிட்டனர். பாத்யா மாவத்தையிலுள்ள சாராநந்த தம்ம நிகேதையைச் சேர்ந்த என மல்தெனியே சாராநந்த தேரர் மற்றும் களுபோவில ஹத்போதிய ரஜமகாவிகாரையைச் சேர்ந்த கரவனல்லே காசியப்ப தேரர் உட்பட தேரர்கள் பொலிஸில் முறைபாடு செய்தனர்.
விஸ்தரிப்பு பணிகள் பொலிஸாரினால் நிறுத்தம்
பாத்யா மாவத்தையைச் சேரந்த பௌத்த குருமார்கள் கொஹுவளை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கடந்த சனிக்கிழமை பள்ளிவாசலுக்கு வந்து விஸ்தரிப்பு வேலைகளைத் தடைசெய்தனர். கட்டட நிர்மாணப் பொருட்களையும் அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட்டனர். வேலைசெய்துகொண்டிருந்த மேசன்மார்களையும் தடுத்து நிறுத்தினார்கள்.
பள்ளிவாசல் நிர்வாகம் அச்சந்தர்ப்பத்திலும் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்தமை பாராட்டத்தக்கதாகும். சட்டரீதியான அனுமதியைப் பெற்றே விஸ்தரிப்புப் பணிகள் நடைபெறுவதாக தமது பக்க நியாயத்தைத் தெரிவித்தனர். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் அவர்கள் விதிக்கும் தடைக்கு வேறு காரணம் கூறி நியாயப்படுத்தினார்கள்.
பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு பிரதேசத்திலுள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் அனுமதிக்க முடியாது என அதிகாரத்துடன் தெரிவித்தனர்.
தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் கூட்டம்
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் கூட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. இச்சந்திப்பில் கொஹுவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என்போர் பொலிஸ் தரப்பில் பங்கு கொண்டனர்.
பள்ளிவாசல் தரப்பில் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் பள்ளிவாசல்களின் தலைவர்கள், உலமாசபையின் பிரதிநிதிகள் என்போர் கலந்து கொண்டனர்.
R.R.T. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்
தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர். ஆர்.டி.அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பள்ளிவாசலின் தரப்பிலான நியாயங்களை பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விளக்கினார்.
பள்ளிவாசல் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மாநகர சபையிடமிருந்து சட்டரீதியான அனுமதி பெறப்பட்டே முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு பெளத்த தேரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பொலிஸாரும் இதனைத் தடை செய்கின்றனர். வேலையில் ஈடுபட்டிருந்த மேசன்மார்களையும் தமது வேலைகளைச் செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.
தொடர்ந்தும் பள்ளிவாசல் விஸ்தரிப்பு வேலைகளைச் செய்வதென்றால் மேசன்மார் பொலிஸில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அச்சுறுத்தியுள்ளார்கள். நீதிமன்றம் தடையுத்தரவொன்றினை பிறப்பித்தாலே எம்மால் விஸ்தரிப்பு வேலைகளை நிறுத்தமுடியும்.
முஸ்லிம்கள் இந்நாட்டின் ஆட்சிமாற்றத்திற்கு பெரிதும் உதவியுள்ளார்கள் என்றாலும் இன்று பள்ளிவாசல் நிர்மாணங்களும் விஸ்தரிப்புகளும் பொலிஸாரினாலும் தேரர்களினாலும் தடுக்கப்படுகின்றன. இது சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பான செயற்பாடுகளாகும் என எடுத்து விளக்கினார்.
பிரதி பொலிஸ் மா அதிபரின் அனுமதி
சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் வாதத்தினையடுத்து பள்ளிவாசலில் அவசரமாக தேவைப்படும் சில விஸ்தரிப்பு பணிகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கினார்.
பள்ளிவாசல் யன்னல்களுக்கு கண்ணாடி பொருத்துதல், படிகள் நிர்மாணித்தல் உட்பட சிறிய வேலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த விஸ்தரிப்பு பணிகளை ஒருவார காலத்தினுள் செய்து முடிக்க வேண்டுமெனவும் பிரதி பொலிஸ் மா அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆட்சிமாற்றத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்த முஸ்லிம் சமூகம் பள்ளிவாசல்களை விஸ்தரிப்பதற்குக் கூட பொலிஸாரினதும் தேரர்களினதும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழல் எமது நாட்டில் உருவாகியுள்ளமை முஸ்லிம்களின் சமய சுதந்திரத்தை சவால்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சவால்களை முறியடிக்க முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
அனுமதி வழங்கப்பட்ட தினம் மீண்டும் தடைஉத்தரவு
கடந்த திங்கட்கிழமை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட ஒருவார கால விஸ்தரிப்பு பணிக்கான அனுமதி அன்று இரவு மறுக்கப்பட்டது.
திங்கட்கிழமை இரு ஜீப் வண்டிகளில் பள்ளிவாசலுக்கு வருகைதந்த சுமார் 10 பொலிஸார் விஸ்தரிப்பு பணிகளுக்குத் தடை விதித்தனர்.
திங்கட்கிழமை தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தின் பின்பு பொலிஸார் அப்பகுதி பன்சலைகளுக்குச் சென்று ஒருவார காலம் விஸ்தரிப்பு பணிகளுக்கு அவகாசம் வழங்கியுள்ளமை பற்றி தெரிவித்துள்ளனர்.
இதனை தேரர்கள் கடுமையாக எதிர்த்ததனாலே அன்று இரவு பள்ளிவாசலுக்கு வந்த பொலிஸார் தடைவிதித்தனர். விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
நாம் பயப்படப் போவதில்லை
திங்கட்கிழமை இரவு பொலிஸார் பள்ளிவாசலுக்கு வந்து விஸ்தரிப்பு பணிகளை நிறுத்துவதற்கு உத்தரவிட்ட போது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளரும் R.R.T.அமைப்பின் தலைவருமான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
அவர் பொலிஸாரின் உத்தரவினை ஏற்றுக்கொள்ளாது சவால் விட்டமை பாராட்டுக்குரியதாகும். சமூகத்துக்கும் மதத்துக்கும் எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது எமது உரிமைகளுக்காகவும் நாட்டின் அமுலிலுள்ள சட்டத்துக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது எமது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இந்தப் பள்ளிவாசல் கட்டடத்தை நாம் விபசாரம் செய்வதற்காக விஸ்தரிக்கவில்லை. அல்லாஹ்வைத் தொழுவதற்காகவே விஸ்தரிக்கிறோம். பொலிஸார் உள்ளே சென்று தாராளமாகப் பார்வையிடலாம். நாம் விஸ்தரிப்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். அதற்கான அனுமதியை தெஹிவளை கல்கிசை மேயரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.
நீதிமன்றில் வழக்குத் தொடருங்கள். எங்களை விளக்கமறியலில் வையுங்கள். எங்களை எரியுங்கள். நாம் பயப்படப்போவதில்லை. நாம் ஒரு குற்றமும் செய்யவில்லை. நல்ல காரியமே செய்கின்றோம். நாம் நீதிக்காக சர்வதேசம் வரை செல்வோம். சட்டத்தின்படி பள்ளிவாசல் கட்டுவதற்கு எமக்கு உரிமையுண்டு. எமது உரிமைகளுக்கு சவால்கள் வரும்போது பொலிஸார் எமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிராஸ் நூர்தீன் பொலிஸாரிடம் தெரிவித்தமை எமது சமூகத்தின் குரலாக அமைந்தது.
அமைச்சர் பௌசி –ரணில் சந்திப்பு
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரச்சினை இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளதென்பதை விளக்கி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு பிரதமரை வேண்டினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்பிரச்சினையை இரு தரப்பினரையும் கலந்துரையாடி தீர்த்து வைப்பதற்கு இணங்கியுள்ளமை அப்பிரதேசத்தில் இன நல்லுறவுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடி சுமுக தீர்வு எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் அழைப்புவிடுக்கும் கலந்துரையாடலுக்கு எமது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். கலந்து கொள்வதிலிருந்தும் தவிர்ந்து பின்பு கலந்து கொள்ளாமைக்கான நொண்டிக் காரணம் கூறுவதிலிருந்து எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பள்ளிவாசல் விவகாரத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கு உறுதியாக இருக்கிறார். முஸ்லிம்களின் சமயக்கடமைகளுக்கு எந்தத் தரப்பினராலும் இடையூறுகள் ஏற்படாதிருக்க உறுதியளித்திருக்கிறார் என அமைச்சர் பௌசி பிரதமருடனான சந்திப்பின் பின் கருத்து வெளியிட்டுள்ளமை ஆறுதலாக இருக்கிறது.
அமைச்சர் பௌசி இப்பிரச்சினையை பொறுமையாக கையாள ஏற்கனவே தெஹிவளை பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நோன்பு காலம் ஆரம்பமாகியுள்ளதால் நாம் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது இவ்விவகாரத்தை பொறுமையாக கையாள்வோம். அப்பிரதேச பௌத்த குருமார்களைச் சந்தித்து பேசுவோம். நாம் பிரச்சினைப்பட்டுக்கொண்டு தராவிஹ் தொழுவதற்கு சென்றால் சிலர் வேண்டுமென்றே கற்கள் எறிந்து முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். என்பதை மறக்க முடியாது.
அமைச்சர்கள் சந்திப்பு
இப்பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது அமைச்சர்கள் சமூக நலன் கருதியும் இஸ்லாத்தை நோக்கமாகக் கொண்டுமே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். பிரதமரையும் ஜனாதிபதியையும் தனித்தனியே சந்தித்து பேசி அறிக்கைகள் விடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே அணியில் திரண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மூலம் பாத்யா மாவத்தை பள்ளிவாசலை காப்பாற்றித் தர வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது.