முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது
முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் நடைபெற்ற இனக் கலவரமானது கடந்த 2018 இல் அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பின்பு அது கண்டி மாவட்டம் முழுவதும் அரங்கேற்றப்பட்டதுடன் நாடு முழுக்க அது தாக்கம் செலுத்தியது. .
நல்லாட்சி அரசாங்கத்தில், 2018 மார்ச் மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரைக்கும் இந்த நாட்டில் எந்தவொரு சிவில் நிருவாகமோ, அரச இயந்திரமோ இயங்கவில்லை.
அத்துடன் மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு படையினர்கள் முகாமுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார்கள். மேலிடத்து உத்தரவு வழங்கப்படாமையே இதற்கு காரணமென்று கூறப்பட்டது.
வன்முறையாளர்கள் முன்னோக்கி வந்தபோது அப்பகுதிகளிலிருந்த பாதுகாப்பு படையினர்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு பின்வாங்கிய சம்பவங்களும் உண்டு.
சிங்கள இனவாதிகள் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது காடைத்தனத்தினை அரங்கேற்றியபோது குறித்த தினங்களில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதற்கோ, வன்முறையை கண்டிப்பதற்கோ, பாதுகாப்பதற்கோ அல்லது உதவுவதற்கோ எந்தவொரு அரச தலைவர்களும் முன்வரவில்லை.
சிங்கள சமூகத்திலிருந்து முதன்முதலாக இலங்கை கிரிக்கட் வீரர் சங்ககார அவர்கள் பகிரங்கமாக முஸ்லிம்களுக்காக அனுதாபம் தெரிவித்த பின்புதான் ஒவ்வொரு அரசியல்வாதிகளாக வாய் திறக்க ஆரம்பித்தார்கள்.
முஸ்லிம்களுக்காக அனுதாபம் தெரிவித்தால் அது சிங்கள வாக்குகளில் பாதிப்பினை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே அவ்வாறு மௌனமாக இருந்ததற்கு காரணமாகும்.
2018 பெப்ரவரி 20ஆம் திகதி கண்டியின் தெல்தெனிய பகுதியில் ஒரு லொறியும், ஆட்டோவும் மோதிக்கொண்டதையடுத்து ஏற்பட்ட வாய்த் தகராரில் ஆட்டோவில் வந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் லொறியை ஓட்டிவந்த சிங்கள இளைஞனை தாக்கினர்.
சுமார் இரு வாரங்கள் மருத்துவமனையில் இருந்த சிங்கள இளைஞன், மார்ச் 3ஆம் திகதியன்று உயிரிழந்தான். இன வன்முறையினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் குறித்த சிங்கள இளைஞனை கொலை செய்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவனது விகாரமான உடலை காட்சிப்படுத்தி சிங்கள இளைஞர்கள் உணர்ச்சியூட்டப்பட்டு முஸ்லிகளுக்கெதிராக களம் இறக்கப்பட்டார்கள்.
அதனை தொடர்ந்து முஸ்லிம்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டு பின்பு எரியூட்டப்பட்டது.
பள்ளிவாசல்களினுள் புகுந்த காடையர்கள் அங்கிருந்த அல்-குர்ஆன்களை எரித்ததுடன், பள்ளிவாசல்களையும் சேதப்படுத்தினார்கள்.
அப்போதைய கணக்கெடுப்பின்படி கண்டி, திகன வன்முறை சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 445 வீடுகளும், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும், இதன் பெறுமதி 885 கோடி ரூபாய்கள் என்றும், 28 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்ததாகவும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு செய்தது.
இதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.
குறித்த வன்முறை 2018 இல் நடைபெற்றபோது மீண்டும் 2019 இல் இதுபோன்று முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் சஹ்ரான் என்ற குழுவை காரணம் காட்டி வடமேல் மாகாணத்தில் உருவாக்கப்படும் என்று அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.
இவ்வளவு பாரிய இனக்கலவரம் நடைபெற்று மூன்று வருடங்கள் பூர்த்தியாகியும், முஸ்லிம்களாகிய நாங்கள் அதிலிருந்து இன்னமும் படிப்பினைகள் பெறவோ, எதிர்கால எமது பாதுகாப்பு பற்றி சிந்திக்கவோ முயலவில்லை.
மாறாக அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்காக மேற்கொள்கின்ற அபிவிருத்தி என்னும் மாயையில் சிக்குண்டு வருவதுடன், அவர்களை நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகர்களாக சித்தரிப்பதிலேயே போட்டிபோட்டுக்கொண்டு ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் காலத்தை செலவழித்து வருகின்றனர். இதனால் எமது எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகவே அமையும்.