மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணி தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், காணிகள் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கண்டு வழங்கப்பட உள்ளதாகவும் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9 மணிக்கு முள்ளிக்குளம் மக்கள் அனைவரையும், காணி தொடர்பாக உள்ள சகல ஆவணங்களையும் பிரதி செய்து, முள்ளிக்குளம் ஆலயத்திற்கு எடுத்து வருமாறும் முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கே.எஸ்.வசந்தகுமார் முசலி பிரதேச செயலகத்திற்கு புதிதாக நேற்று(3) நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று காலை முள்ளிக்குளம் கிராம மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட நிலப்பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் மறுநாள் 30ஆம் திகதி முள்ளிக்குளம் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்துள்ளதுடன் தங்களது கிராமத்திற்குள் 10 வருடங்களின் பின்னர் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
தற்போது முள்ளிக்குளம் மக்கள் ஆலயம் சார்ந்த பகுதிகளில் தங்கியுள்ளனர். குறித்த மக்களின் நிலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று காலை 10 மணியளவில் முள்ளிக்குளத்திற்குச் சென்று முள்ளிக்குளம் ஆலயம் சார்ந்த பகுதிகளில் தங்கியுள்ள மக்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.
அத்துடன், இந்த பிரதேச செயலக காணி பிரிவு அதிகாரிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை, முள்ளிக்குளம் பங்குத்தந்தை, அருட்தந்தை அன்ரன் தவராசா,மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
மேலும், பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் முள்ளிக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடங்களை பார்வையிட்டதோடு, கடற்படையினர் வசமுள்ள மிகுதியான மக்களின் காணிகள் மற்றும் அரச காணிகளையும் பார்வையிட்டுள்ளனர்.
அதே பகுதியில் வர்த்தகமானி அறிவித்தலை ரத்துசெய்யக் கோரி கடந்த 35வது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தும் மறிச்சுக்கட்டி பாலைக்குழி மற்றும் கரடிக்குழி முஸ்லிம் மக்களை பழைய பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் புதிய செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் பார்வையீட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.