Breaking
Wed. May 1st, 2024

தொழுகைக்காக அதான் சொல்வது கூட தடுக்கப்பட்டிருந்த கொடூர ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நல்லாட்சி நடக்கின்ற சூழ்நிலையில் முஸ்லிமகளின் நலன்களை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடாக கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம் என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (23) இரவு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற மருதம் கலைக்கூடல் மன்றத்தின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தமது சமய கடமைகளைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாத நிலைமை காணப்பட்டது.

எமது பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. சில பள்ளிவாசல்களை மூட வேண்டியேற்பட்டது. அந்த அநியாயங்களை நாம் மறந்து விட முடியாது. பள்ளிவாசல்களை பதிவு செய்வதில் இறுக்கமான விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன. இன்று அந்த நிலைமை எல்லாம் மாறியுள்ளன.

தற்போது பள்ளிவாசல்களை இலகுவாக பதிவு செய்து கொள்ள முடியும். அதற்கான வேலைத் திட்டத்தை எனது அமைச்சின் மூலம் மேற்கொண்டுள்ளேன்.

அப்படியிருந்தும் சில பள்ளிவாசல்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அவற்றின் நிர்வாகிகள் இது விடயத்தில் கரிசனையற்று இருக்கின்றனர்.

இந்த நல்ல சந்தர்ப்பம் எங்களுக்கு தொடர்ந்தும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செயற்றிறன் குன்றிக் காணப்பட்ட வக்பு சபையை நாம் தற்போது மீளமைத்துள்ளோம். அறிஞர்களின் வழிகாட்டலில் அதன் பணிகளை சிறப்பாக முன்னெடுக்கின்றோம்.

பள்ளிவாசல்களில் நிலவும் பிரச்சனைகளை நேர்மையாக கையாள்கின்றோம். பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப் மற்றும் முஅத்தின்களுக்கு காப்புறுதித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளோம். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் அதனை வடிவமைத்து வருகின்றோம்” என்றார்.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.ஜப்பார், கல்முனை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், ஊடகவியலாளர்களான ஏ.எல்.எம்.முக்தார், பி.எம்.எம்.ஏ.காதர், எம்.வை.அமீர் ஆகியோர், அமைச்சரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

திருமலை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எம்.எம்.சக்காப், கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *