பேலியகொட மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள நவீனமயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனைப் பிரிவினை பயனாளிகளிடம் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும், பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நடுநாயகமான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்சவும் கலந்து கொண்டார்கள்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள பேலியகொட சந்தையின் மொத்த விற்பனை பிரிவின் பணிகளை கடற்றொழில் அமைச்சரின் அழைப்புக்கமைய பசில் இராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
கடந்த வருடம் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக குறித்த சந்தையின் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இருப்பினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசகரே ஆகியோர் அமைச்சு அதிகாரிகளின் ஒததுழைப்புடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து சுகாதார முறைகளுக்கு அமையக் குறித்த மட்டுப்படுத்தப்பட்ட முறையில் சந்தையின் வியாபார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மொத்த விற்பனையை விரிவுபடு்த்தும் வகையில் நவீன வசதிகளுடனான குறித்த கட்டிடத் தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.