(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் உடனடியாக அவர்களது நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும்.
அகதிகள் என்ற போர்வையில் முஸ்லிம்கள் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு அரசு இடமளிக்கக் கூடாது. கடலோர பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அல்லது வில்பத்துவில் குடியேறுவதற்கு வந்திருக்க வேண்டும். ரோஹிங்யா முஸ்லிம்கள். அவர்களது நாட்டிலே பௌத்தர்களுக்கு எதிராக செயற்படுபவர்கள். இவர்களைப் பற்றி அறியாது கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களை கிழக்கில் அல்லது நாட்டில் எங்காவது குடியேற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
நேற்று மதியம் பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
கிழக்கில் எங்களுக்கென்று புராதன வரலாறு ஒன்று இருக்கிறது. தொல்பொருள்கள் பரந்து கிடக்கின்றன. என்றாலும் அங்கே சிங்களவர்கள் அகதிகள் போன்றே வாழ்க்கை நடத்துகிறார்கள். முஸ்லிம் அடிப்படைவாதிகள் எப்போதும் அவர்களை எதிர்த்து வருகிறார்கள். எங்களது காணிகளை அபகரித்திருக்கிறார்கள். அரசாங்கமோ கிழக்கு மாகாண முதலமைச்சரோ இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை. ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் எங்கிருந்தோ வந்த முஸ்லிம் அகதிகளை கிழக்கில் குடியேற்ற முயற்சிக்கிறார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷுரா கவுன்ஸில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பிரச்சினை முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன, பௌத்தர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதால் பீதியுடன் வாழ்கிறார்கள் என்றெல்லாம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பிரசாரம் செய்தவர்கள் இன்று மியன்மார் முஸ்லிம் அகதிகளைக் குடியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
10 வருடங்களுக்கு முன்பு ரோஹிங்யாவில் பௌத்த முஸ்லிம் கலவரங்கள் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் இது எமது நாடு என்று கூறி பௌத்த மதகுருமாரையும் பௌத்தர்களையும் தாக்க முற்பட்டதனாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பங்களாதேஷிலிருந்து ரோஹிங்யாவுக்கு முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இதனால் அங்கு முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம் அகதிகள்
வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து முஸ்லிம்கள் அகதிகளாக வந்து குடியேறுகிறார்கள். நீர்கொழும்பில் மாத்திரம் 1500 பேர் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் போதைப்பொருள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களால் எமது கலாசாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் பௌத்த மத குருக்கள் போல் வேடமிட்டு காவியுடை அணிந்து இலங்கை வந்து தங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பு பிரிவினரதும் உளவுப் பிரிவினரதும் தகவலின்படி இந்தியாவில் 14 ஆயிரம் பேர் அகதிகளாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். சவூதி அரேபியா அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதற்கு மறுத்துள்ள நிலையில் ஏன் நாம் அவர்களுக்குப் புகலிடம் வழங்க வேண்டும். எனவே மியன்மார் அகதிகள் உடனடியாக நாட்டிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும்.
பல்வேறு நாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். மாலைதீவிருந்து மாத்திரம் இங்கு வந்து 50 ஆயிரம் பேர் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களால் கொழும்பு மீதொட்டமுல்லை குப்பைமேடு போலாகியுள்ளது. எதிர்காலத்தில் மீதொட்டமுல்லை அனர்த்தத்தை விட பாரிய அனர்த்தம் இங்கு ஏற்படும். இந்த விடயங்களை நாம் எடுத்துச் சொன்னால் நாம் சதி செய்பவர்கள், இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள் என எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
மோடிக்கு கறுப்புகொடி
தேசப்பற்றுள்ள இயக்கங்களும் மக்களும் வெசாக் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள வருகை தரும் இந்திய பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையை இந்தியாவின் கொலனியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று குற்றம் சாட்டியே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைக்கேற்பவே திட்டங்களை வகுக்கிறது. பிரதமர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதியையே மக்கள் சாடுகின்றனர். மோடிக்கு கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பதை நாம் விரும்பவில்லை. தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்க நாம் முன் நிற்கமாட்டோம் என்றாலும் இலங்கையை இந்தியாவின் கொலனியாக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.