–சுஐப் எம். காசிம்-
ராஜதந்திர நெருக்குவாரங்களின் எதிரொலிகள், நமது நாட்டு அரசியலில் இன்னும் நீங்கியதாக இல்லை. சீனாவின் தலையீடுகள் தலையெடுப்பதாக ஒரு சிலரும், இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரிப்பதாக இன்னும் சிலரும் பேசித்திரிவதும் இதற்காகத்தான். மேலைத்தேய நாடுகளின் பிடியிலிருந்து விலகுவத ற்காக வேறு ராஜதந்திரத்தைப் பாவிக்கப் புறப்பட்டதால் வந்த வினைகளா இவை?
இதற்காகத்தான், இந்தியாவும் இப்போது, இலங்கை விடயத்தில் மும்முரம் காட்டுகிறதோ? இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்டன சிறிங்கல, அதற்கடுத்ததாக இந்திய இராணுவத் தளபதி மனோஜ் முகுண்ட் நரவனா ஆகியோர் வந்து சென்ற பின்னணிகளில்தான், இது பற்றி அதிகம் பேசப்படுகிறது.
இப்போதெல்லாம், இந்தியாவின் தலையீடுகள் அரசியலிலும், சீனாவின் பிரசன்னம் அபிவிருத்திகளிலும் ஆதிக்கம் செலுத்தப்போகும் அறிகுறிகளே தென்படுகின்றன. இதனால்தான், இந்திய அதிகாரிகள் வந்த கையோடு, மாகாண சபைத் தேர்தல் பற்றிப் பேசப்படுகிறது.
அடுத்த வருடத்தின் காலாண்டுக்குள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தலை, எந்த முறையில் நடத்துவது என்பதில்தான் இன்று இழுபறிகள் உள்ளன.
கலைக்கப்பட்டு மூன்று வருடங்களாகியும் மாகாண சபைகள் இயங்காதுள்ளமை, எல்லோரை விடவும் இந்தியாவுக்கே பெரும் பிரச்சினை. அயல்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டமைக்கான இந்திய அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் உள்ள போது, இலங்கையில் இல்லாதிருப்பதா? 13 திருத்தம் எழுத்தில் உள்ளதை விட, மாகாண சபைகள் நடைமுறையிலிருப்பதுதானே அடையாளம். ஆனாலும், இது தேவைப்பட்டோருக்கு இப்போது தேவைப்படவில்லையோ? என்று எண்ணுமளவில்தான் சிறுபான்மை கட்சிகளின் செயற்பாடுகள் உள்ளன.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும்படி இந்தியா மட்டும் கூறிப்பயனில்லை, தமிழ் கட்சிகளும் இதைக் கோர வேண்டும் என்பதைத்தான், செயலாளர் ஹர்ஷ்வர்டன சிறிங்கலவும் சொல்லிச் சென்றுள்ளார். இந்தியாவின் தேவைக்காக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது, அந்நிய ஆதிக்கத்துக்கு உட்படும் செயலென எதிர்க்கட்சிகள் தூக்கிப் பிடிப்பதும் இதைத்தான். எனவே, இத்தனை இழுபறிகளுக்குள் எப்படி நடத்தப்படும் இந்தத் தேர்தல்?
புதிய முறையிலா? அல்லது பழைய விகிதாசார முறையிலா? புதிய முறை இன்னும் பூர்த்தியாகவில்லையே!எல்லை நிர்ணயம், பெண்களின் பிரதிநிதித்துவம், ஒரு தொகுதியில் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவர் போட்டியிடுவது, மாவட்டங்களை வெல்லும் கட்சிகளுக்கு இரண்டு ஆசனங்கள், ஐம்பதுக்கு ஐம்பது என்ற தொகுதி, விகிதாசாரங்களின் சமநிலைகளில் குழப்பங்கள் உள்ளதாகத்தானே, மூன்று வருடங்களாகியும் இந்தத் தேர்தலை நடத்த முடியாதிருக்கிறது.