பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமுகமளிக்காமல் நீதிமன்றத்துக்கு மருத்துவ சான்றிதழ் அனுப்பும் அதிசயமும் நல்லாட்சியில் மாத்திரமே இடம்பெறும் அதிசயங்கள் என்று பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் சாடியுள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது, வைத்தியாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ள நிலையில், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வளர்த்த கடா மார்பில் பாய்வதால் நல்லாட்சியாளர்கள் தற்போது வாயடைத்துப் போய் நிற்கின்றார்கள் என்று குறிப்பிட்ட அவர்,
ஞானசார தேரர் இந்த நல்லாட்சியாளர்களின் பங்காளி என்றும் அவரை ஏவிவிட்டு மஹிந்த ராஜபக்சவை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதற்கு சதி செய்யப்பட்டதாக தாம் தொடர்ச்சியாக கூறிவந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அன்று தங்களை விமர்சித்தவர்கள் இன்று நிர்வாணமாக நிற்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தில் அவரை பாதுகாத்த அதே சக்தி இந்த அரசாங்கத்திலும் அவரை பாதுகாக்கின்றது என்று குற்றம் சுமத்திய இபாஸ் நபுஹான்,
அவ்வாறு பாதுகாக்க தவறும் பட்சத்தில் அவர் தொடர்பான பல உண்மைகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக பல சதிகளையும் ஞானசார தேரர் வெளியிட வேண்டி ஏற்படலாம் என்றும் அதனால் பலரது முகத்திரைகள் கிழியும் என்பதே இதன் பின்னால் உள்ள மர்மமாகும் என்றும் கூறியுள்ளார்.
ஞானசார தேரருக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் அடைக்கலம் வழங்கியதாக கூறியவர்கள் இன்று நிர்வாணமாகி நிற்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.