பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினால் மக்கள் பாதிப்பு அமைச்சர் தெரிவிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையினை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலவரம் தொடர்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில்,

பொதுவாகவே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தற்போதைய நிலையில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

மன்னார் வைத்தியசாலையினை பொறுத்தவரையில் பொது மருத்துவ பிரிவிற்கும், அறுவைச்சிகிச்சை பிரிவிற்கும் 2 வைத்திய நிபுணர்கள் வீதம் தற்போது கடமையில் இருக்கின்றார்கள்.

ஆனால் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவிற்கும், மிக முக்கியமான மகப்பேற்று சிகிச்சை பிரிவிற்கும் ஒரு வைத்திய நிபுணருடைய உதவியுடனேயே இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான காலப்பகுதியிலேயே குறித்த வைத்திய நிபுணர்கள் கடமை விடுமுறை எடுக்கின்ற போது அவர்களுக்கு பதிலாக அங்கே சேவையாற்ற வைத்திய நிபுணர் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான காலங்களில் நாங்கள் வேறு நிலையங்களுக்கு நோயாளர்களை அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

கடந்த மாதம் மட்டும் மகப்பேற்று நிபுணர் விடுமுறையில் இருந்த காலங்களில் பதில் மகப்பேற்று நிபுணர் இல்லாத காரணத்தினால் பல கர்ப்பிணி தாய்மார்களை பிரசவத்திற்காக யாழ். வைத்தியசாலைகளுக்கு இடமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன்போது பல தாய்மார்கள் நோயாளர் காவு வண்டியினுள் குழந்தைகளை பிரசவித்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 15 பிரசவங்கள் கடந்த மாதம் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

மேலும், சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தாய் ஒருவர் இரத்தப்பெருக்கின் காரணமாக உடனடியாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட வேண்டிய தேவை இருந்தது.

இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு இருந்தாலும் குறித்த சிகிச்சை பிரிவில் கடமையாற்ற வேண்டிய மயக்க மருந்து கொடுக்கும் வைத்திய நிபுணர் இல்லாமையினால் குறித்த தாயைக்கூட வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ந்தும் குறித்த வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நான் இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்தினவுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெரியப்படுத்தியுள்ளேன்.

கொழும்பில் மத்திய சுகாதார அமைச்சினுடைய பணிப்பாளர் நாயகத்துடனும் தொடர்பு கொண்டு நிலைமையை நான் தெளிவுப்படுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி கடிதம்.

wpengine

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர்.

wpengine

இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது -பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine