Breaking
Fri. Apr 19th, 2024
எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  “பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள்’ தொடர்பிலான தனிநபர் பிரேரணை  மீதான விவாதத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள்  காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும் மிக முக்கிய ஒன்றாகும்.
விசேடமாக, காணமல்போனவர்களைக் கண்டறிதல் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்கள்  இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும், கடமையுமாகும்.
அதேபோன்று, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி பல வருடங்களாக சில இளைஞர்கள் பல தசாப்தங்களாக சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்து உடனடி நிவாரணத்தை வழங்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.
இவ்விரு  பிரதான பிரச்சினைகளையும்  இன்று விவாதத்துக்கு கொண்டுவந்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவரின் உரையில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். எவ்வித எதிர்ப்புமின்றி அதனை ஆமோதிக்கின்றோம்.
குறிப்பாக, சிறைகளில் வாழ்கின்ற இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.  அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பலரும் அழுத்தங்கள்  கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாமை மிகவும் மனவேதனையான அம்சமாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இன்று மன்னிக்கப்பட்டு அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், அசாதாரன சூழலில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி சகோதரர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற ஒன்றாகும் என்பதுடன் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் அல்லது தாக்குதல்கள் இடம்பெற்றபோது வீதிகளில் நின்றிருந்த அப்பாவி இளைஞர்கள் மற்றும்  12,13 வயது பாடசாலை மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 20, 25 வருடங்களாக இன்றுவரை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆகவே, இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது. நாட்டில் அமைதி  சமாதானம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமையான  சமாதானமான   அமைதியான சூழலில்  கடந்த கால யுத்த சூழலில் பிடிக்கப்பட்டு  கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற அத்தனை இளைஞர்களும் உடனடியாக  ஏதோ ஒரு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன்,  அவர்களுக்கான விசாரணைகளைத் துரிதப்படுத்தி இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்கள்  விடுதலை செய்யப்படவேண்டும்.
மார்ச்  8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருகின்றோம். ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற பெண்களின் முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.
இயற்கை அனர்த்தம்  யுத்தம் மற்றும் அசாதாராண நிலைமைகளினால் கணவன்மாரை இழந்த 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் வடக்கு  கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர்.
கடந்த கால யுத்த சூழலில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகம் பெண்கள் சமூகம். சோதனை வேதனைகளைத் தாங்கிக்கொண்டு வீடுகளிலே பல்வேறு துன்பங்களுக்கு  மத்தியில்  அவர்கள் வாழ்கின்றனர்.
இவ்வாறு வடக்கு, கிழக்கு பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்தித்து அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மகளிர் தினத்தை முன்னிட்டு கோரிக்கை முன்வைக்கின்றோம். இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வடக்கு, கிழக்கு பெண்களுடைய உறவுகள்  பற்றியே நாங்கள் இன்று விவாதித்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் காலம் தாமதிக்காது  சிறைகளில் வாடுகின்ற அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். இவர்களை விடுதலை செய்வதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
அரசியல்கைதிகளை  விடுதலை செய்வதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இனவாதம் பேசும் சிலரே கூறுகின்றனர்.  இவற்றைப் பொருட்படுத்தாது உடனடியாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *