Breaking
Sun. Nov 24th, 2024

 

ஊடகப்பிரிவு

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு   தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டம் ஒன்ரை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள வகை செய்வதாக உறுதியளித்தார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (௦1) காலை இடம் பெற்ற போதே  அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், சிவ சக்தி ஆனந்தன் உட்பட அதிகாரிகள்  கலந்து கொண்ட இந்த கூட்டம் அரச அதிபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது

குள நீர்ப்பாசனத்தின் கீழான காணிகளின் அத்துமீறல்கள் குறித்தும் விவசாயிகளின் முறைப்பாடுகள் குறித்தும் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம் பி இங்கு  சுட்டிக் காட்டிய போது, அதை கவனத்தில் எடுத்த அமைச்சர் ரிஷாத், மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச சபைத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும்  திணைக்கள உத்தியோகத்தர்கள் கொண்ட குழு ஒன்று அமைப்பது பற்றிய ஆலோசனையை வழங்கிய போது, அபிவிருத்தி குழு அதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன் இது தொடர்பான  முறைப்பாட்டார்ள் இந்த குழுவுக்கு இரண்டு வார காலத்துக்குள் தமது பிரச்சினைகளை  எழுத்து மூலம் வழங்க வேண்டும் எனவும்  அறிவிக்கப்பட்டது

மன்னார் தீவுக்குள் எழுந்தமானமாக கண்டபடி மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் வெளி மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள், கொழும்பின் உயர் அதிகாரிகளின் தயவுடன் இந்த மண் மாபியா தொழிலை மேற்கொள்வதாகவும்   அங்கு சுட்டிக் காட்டப்பட்ட போது, துறைக்கு பொறுப்பான திணைக்கள தலைவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், இதனை நிறுத்த உடன்  நடவடிக்கை எடுக்குமாறு  வலியுறுத்தினார்

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சார்ல்ஸ் நிர்மலநாதன் எம் பி., மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலோ வேறு திணைக்களத்திலோ சுட்டிக்காட்டினாலும் அங்கு உருப்படியாக எதுவுமே நடைபெறுவதில்லை, அமைச்சர் ஒருவர் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலமே உரிய பலன் கிட்டும் என  குறிப்பிட்டதுடன், ஒரு மாவட்டத்தின் முக்கியமான அபிவிருத்திகளுக்கு  அமைச்சர்களின் முக்கியதத்துவம்  குறித்து சிலாகித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு பல்வேறு   பிரச்சினைக்கான தீர்வு குறித்து நடவடிக்கை எடுத்ததுடன் சில ஆலோசனைகளையும் முன்வைத்தார். ‘ மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளின் மேம்பாடு தொடர்பாக, குறிப்பிட்ட அமைச்சர், மாவட்டத்தின் சமுர்த்தி அதிகாரிகள் வெறுமனே இந்த மக்களை தொடர்ந்தும் கையேந்துபவர்களாக வைத்திருக்காமல் ஒரு நிலையான திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயனாளிகள் பயன் அடைவர் என்றார். இந்த திட்டத்துக்கு  சமுர்த்தி திணைக்களத்தின் உதவிகளுக்கு அப்பால் தமது அமைச்சும் சில பரப்புகளில் உதவ முடியும் என குறிப்பிட்டார். சமுர்த்தி அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் உள்ளடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட காலத்துக்குள் பயனாளிகளுக்கு நிலையான வருவாயை ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை கையளிக்குமாறு அதிகாரிகளை வேண்டினார்.

 

உள்ளுராட்சி மன்ற  தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மனதில் கொண்டு அதிகாரிகள் அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டுமெனவும்  பொது மக்கள் தினங்களில் வரிசைகளில்   நின்று தமது காரியங்களை அவர்கள்  நிறைவேற்றி கொள்வதை தவிர்த்து, பிரத்தியேகமான தினம் ஒன்றை ஒதுக்கி கொடுப்பது சிறப்பானது  என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின் பின்னர்  தேசிய கொள்கைகள்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட பயிலுனர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்களும் கையளிப்பட்டது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *