மன்னார் மாவட்டத்தில் இதுவரை 21 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தேர்தல்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல்கள் உதவி தெரிவத்தாட்சி அலுவலகரும் முறைப்பாட்டு நிலைய அதிகாரியுமான எல்.என்.றொகான் குரூஸ் தெரிவித்துள்ளார்.
இம் முறைப்பாடுகளில் ஒன்றான நேற்று இரவு இடம் பெற்ற தேர்தல் அசம்பாவிதத்தால் மன்னார் தோட்வெளி யோசப் வாஸ் நகர் கிராமத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரக் காரியாலய வளாகத்தில் உட்புகுந்த நபர்கள் அவ் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் படத்தின் முகத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் புகைப்படம் கொண்ட விளம்பரத்தை ஒட்டியிருந்ததாகவும் அக் கட்சி அலுவலக வளாகத்தை சேதப்படுத்தப்பட்டதுடன் வளாகத்துக்குள் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளரின் விளம்பரங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் மற்றும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.