‘இயற்கையோடு இணைந்த நிலையான வளர்ச்சி திட்டத்தின் கீழ்’ மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதியில் ‘ஹிருரஸ் பவர்’ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 15 மெகா வாட் காற்று மின் சக்தி நிலையம் இன்று (06) மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
எனினும் குறித்த காற்றாலை மின்சக்தி நிலைய திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதியில் ‘ஹிருரஸ் பவர்’ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 15 மெகா வாட் காற்று மின் சக்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 06 மின் காற்றாலை கோபுரங்களை கொண்ட குறித்த காற்றாலை மின்சக்தி நிலையத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கு அமைச்சரினால் பாடசாலை கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த காற்றாலை மின்சக்தி நிலைய திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள காற்றாலை மின் கோபுரத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு பல தடவை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் அதிகமானவர்கள் அருகில் உள்ள கடலை நம்பி வாழ்ந்து வருவதாகவும், இதனால் அவர்களின் கடல் தொழில் நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் காற்றாலை கோபுரங்களில் இருந்து வெளிவரும் சத்தத்தினால் தாங்கள் பல்வேறு இடர்களை சந்திப்பதாகவும், இரவு நேரங்களில் உரிய முறையில் நித்திரை கொள்ள முடியாத நிலை உள்ளதோடு, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமது கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் அமைக்கப்பட்டுள்ள 2 மின் காற்றாலை கோபுரங்கள் உடன் அகற்றப்பட வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது.