(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் பெரியமுறிப்பு ஒதுக்காடு அருவியாறு பண்ணவெட்டுவான் பிரதேசத்தில் சட்டவிரோதமாக நுழைந்து ஆற்று மண் அகழ்வு செய்ததுடன் அப்பகுதியை சேதப்படுத்திய நபர்கள் மூவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் மூவரும் தலா ஐம்பதாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (16.3.2016) மடுப்பகுதியைச் சேர்ந்த இருவரும் வவுனியாப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் பெரியமுறிப்பு ஒதுக்காடு அருவியாறு பண்ணவெட்டுவான் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து 115 ரூபா பெறுமதியான மணல் சேகரித்து வைத்திருந்ததுடன் 22 ஆயிரத்து 500 ரூபாவுக்கான ஆற்றங்கரையை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மூவருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழக்குகள் வன பரிபாலன திணைக்களத்தால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வன பரிபாலன திணைக்கள வட்டார அதிகாரி ஏ.ஆர்.எம்.நியாஸ் வெள்ளிக்கிழமை (18.3.2016) மன்னார் நீதவான் நீதிமன்றில் இது சம்பந்தமான மூன்று நபர்களுக்கு எதிராக தனித்தனியான வழக்குகளை தாக்கல் செய்தபோது விசாரனையை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ மூவரையும் தலா ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் கைப்பற்றப்பட்ட ஒரு ரிப்பர் மற்றும் உழவு இயந்திரத்தையும் விடுவித்ததுடன் பிறிதொரு தினத்துக்கு இவ் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.