Breaking
Fri. Nov 22nd, 2024
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் பாலங்களால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அங்கு அமைக்கப்பட்டு வரும் பாலங்களுக்கு “குவாரி டஸ்ட் தூள்” பயன்படுத்தப்பட்டு வருவதினாலேயே எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் மண்டைக்கல்லாறு, பாலியாறு, வங்காலை, அரிப்பு, மறிச்சிக்கட்டி மற்றும் செட்டிக்குளம் ஆகிய ஆறு முக்கிய பாலங்களை புதிதாக அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எனினும் குறித்த பாலங்கள் அமைக்கும் பணிகளில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரதான பாலங்களின் கட்டுமானப் பணிகளின் கொங்கிரீட் கலவைக்கு ஆற்று மணல் மாத்திரமே பயன்படுத்தப்படுதல் வேண்டும் எனினும் மன்னாரில் இடம்பெற்று வருகின்ற கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும் மன்னார் மாவட்டத்தில் இருந்து வடக்கு முழுவதிற்கும் ஆற்று மணல் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டு ஆயிரம் ரூபா பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் யாழ்பபாணத்தில் இடம்பெற்று வரும் பல கட்டுமானப் பணிகளுக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற ஆற்று மணலினை பயன்படுத்தி பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, குவாரியில் பெற்றுக்கொள்ளப்படும் “டஸ்டை” பயன்படுத்தி இது வரை எவ்வித பால வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற சில பாலங்கள் மணல் மண்ணை பயண்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.

 

எனினும், மன்னார் மாவட்டத்தில் போதிய மணல் மண் இருந்தும் தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்களை இணைத்து குறித்த ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 10ஆம் திகதி “குவாரி டஸ்ரினை” பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலங்களின் ஆரம்பப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் பிரதான பாலம் என்பது பல வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டிய ஒன்று என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற புதிய பாலங்களின் நிலை மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பில் அரசியல்வாதிகள், திணைக்கள தலைவர்கள் , அதிகாரிகள் தொடர்ச்சியாக அமைதி காத்து வருகின்றனர்.

 

மன்னார் மாவட்டத்தில் இருந்து ஆற்று மணல் யாழ்ப்பாணம் மற்றும் தென் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குறித்த பிரச்சினைகளின் போதும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அமைதி காத்து வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அமைக்கப்பட்டு வருகின்ற பாலங்களின் தரம் குறித்து அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தரமான பாலக் கட்டுமான பணிகளை முன்னெடுக்க வழிவகுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *